ஈரோடு: சென்னிமலை அருகே வீடு புகுந்து முதிய தம்பதியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்து, 15 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், சென்னிமலை அடுத்த ஒட்டன்குட்டை கரியங்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் முத்துசாமி (85). விவசாயி. இவரது மனைவி சாமியாத்தாள் (80). இவர்களது மகள்கள் வசந்தி, கவிதா, கலையரசி ஆகியோருக்கு திருமணமாகிவிட்டது. தனியாக வசிக்கும் முத்துசாமியும், சாமியாத்தாளும் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு தூங்கினர். நள்ளிரவில் முத்துசாமி வீட்டின் கதவை கம்பியால் நெம்பி திறந்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் முத்துசாமியை இரும்பு கம்பியால் சரமாரியாக அடித்தனர்.
சத்தம் கேட்டு எழுந்து கூச்சல் போட முயன்ற சாமியாத்தாளையும் இரும்பு கம்பியால் தாக்கினர். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்தனர். முத்துசாமியின் பேரன் அஜித் (23), தாத்தா, பாட்டியை பார்க்க நேற்று காலை வந்தபோது இருவரும் இறந்து கிடப்பதை பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில், பீரோ உடைக்கப்பட்டு 15 பவுன் தங்க நகை, ரூ.60 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.
கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். வளர்ப்பு நாய் மர்மச்சாவு: முதிய தம்பதியர் வீட்டில் பாதுகாப்பிற்காக நாய் ஒன்றை வளர்த்துள்ளனர். இந்த நாய் ஒரு வாரத்திற்கு முன் திடீரென இறந்துவிட்டது. இதனால், மர்ம நபர்கள் திட்டம் தீட்டி, ஒரு வாரத்திற்கு முன்பே நாய்க்கு விஷம் தடவிய பொருளை கொடுத்து கொன்றுவிட்டு, நேற்று முன்தினம் தம்பதியை கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.