பாலக்காடு : பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் ஆதிவாசி முதியவரை காட்டு யானை துதிக்கையால் தூக்கி வீசியதில் படுகாயமடைந்தார். இவரை வனத்துறையினர் மீட்டு கோட்டத்தரையிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அட்டப்பாடி புதூர் கிராமப்பஞ்சாயத்துக்கு உட்பட்ட சீரக்கடவை சேர்ந்த முதியவர் மல்லன் (75). இவர் ஆடுகளை மேய்ச்சலுக்காக வீட்டின் அருகேயுள்ள காட்டுப்பகுதிக்கு நேற்று கூட்டிச்சென்றுள்ளார்.
அப்போது அப்பகுதியில் புதர் காடுகளில் மறைந்து நின்ற நான்கு யானைகளில் ஒன்று, மல்லனை துதிக்கையால் தூக்கி வீசியுள்ளது. இதனை பார்த்த மனைவி மற்றும் பேரக்குழந்தைகள் பார்த்து கூச்சல் போட்டு அக்கம் பக்கத்தினரை வரவழைத்து யானைகளை விட்டியுள்ளனர். தொடர்ந்து, வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தொடர்ந்து, அகழி வனத்துறையினர் விரைந்து வந்து மல்லனை மீட்டு அட்டப்பாடி கோட்டத்தராவிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்பு மேல் சிகிச்சைக்காக திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.