*நெடுஞ்சாலை பணியாளர்கள் உடனடியாக அகற்றினர்
ஏலகிரி : ஏலகிரி மலையில் பெய்த கனமழையின் காரணமாக 9வது கொண்டை ஊசி வளைவில் பாறைகள் உருண்டன. தகவல் அறிந்த நெடுஞ்சாலை பணியாளர்கள் உடனடியாக அகற்றினர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு சுமார் 11 சிறிய கிராமங்களை உள்ளடக்கி தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. இம்மலையில் மலைவாழ் மக்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இங்கு விவசாயிகள் சாமை, கேழ்வரகு, சோளம், நெல், கொய்யா, மா, வாழை, பீன்ஸ், கத்தரி, தக்காளி, உள்ளிட்டவை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு சரியாக மழை பொழிவு இல்லாததால் வறட்சி நிலவியது. இதனால் விவசாயிகள் பயிர்கள் பயிரிட முடியாமலும், விவசாயம் செய்த பயிர்கள் காய்ந்து வாடிய நிலையில் இருந்தது. மேலும் இங்கு உள்ள ஏரிகள், குட்டைகள், கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் வறட்சியாக காணப்பட்டது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வந்த நிலையில் ஏலகிரி மலையில் மழை பொழிவு குறைவாக இருந்தது. ஆனால் தற்போது கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் கன மழை பெய்தது. இதனால் அனைத்து ஏரிகள், குட்டைகள், கிணறுகள் நிரம்பி ஓடின. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கன மழை பெய்ததில் ஏலகிரி மலைப்பாதையில் ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவில் பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன. மேலும் அத்தனாவூர் முதல் நிலாவூர் செல்லும் முக்கிய சாலையிலும், 14வது கொண்டை ஊசி வளைவிலும் ராட்சத மரம் முறிந்து சாலையில் விழுந்தது.
இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் மணி சுந்தரம், சாலை ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் மேற்பார்வையில் சாலை பணியாளர்களைக் கொண்டு மலைப்பாதையில் உருண்ட கற்களையும், அத்தனாவூர் சாலையில் முறிந்து விழுந்த ராட்சத மரத்தையும், 14வது கொண்டை ஊசி வளைவில் முறிந்த மரத்தையும் உடனடியாக அகற்றினர். அதன் பின்னர் போக்குவரத்து எந்த இடையூறும் இல்லாமல் சீராக சென்றது.