நன்றி குங்குமம் ஆன்மிகம்
வல்லம் ஏகௌரி அம்மன்
தஞ்சாசுரன் எனும் அசுரனை அழித்து தஞ்சாவூர் எனும் பெயர் வர காரணமே இந்த ஏகௌரி அம்மன்தான். ஈசனிடம் பல வரங்கள் பெற்ற தஞ்சாசுரன் பூமிக்குள் இருந்தவர்களை இம்சித்தான். யோகிகளையும் முனிவர்களையும் யாகம் செய்யாது தடுத்து ஓடச் செய்தான். தேவர்கள் என்ன செய்வது என்று தெரியாது கௌரியின் பாதம் பணிந்தனர். கௌரி காளியானாள். தஞ்சன் முன்பு தோன்றி னாள். சிம்மத்தின் மீதேறி வந்த அம்மனைக் கண்டவுடன் கொதித்தான். மேலே பாய்ந்தான்.
சிறிதும் தயங்காமல் ஏகௌரி எனும் காளி தஞ்சாசுரனின் தலையைக் கிள்ளி எறிந்தாள். தஞ்சனை வதைத்த சீற்றம் குறையாது வனம் முழுவதும் அலைந்தாள். ஈசன் சாந்தம் கொள் என்று கட்டளையிட்டார். அமைதியடைந்த தேவி நெல்லிப்பள்ளம் எனும் வல்லத்தில் அமர்ந்தாள். தீச்சுடர் பறக்கும் கேசங்களோடு எண் கரங்களிலும் ஆயுதங்கள் ஏந்தி தாமரைப் பீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் அருளைப் பொழிகிறாள். வாழ்க்கையில் நொடிந்து போனவர்கள் இவளின் சந்நதியை அடைந்த நேரத்தில் ஏற்றம் தருவாள்.
ஏற்றம் தருவாள் ஏகௌரி அம்மன் என்றே கூறுவார்கள். தஞ்சாவூர் – திருச்சி சாலையில் 12 கி.மீ. தொலைவிலுள்ள வல்லத்திலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் ஆலக்குடிசாலையில் 1 கி.மீ. தொலைவில் பயணித்தால் ஏகௌரி அம்மன் ஆலயத்தை அடையலாம்.
முத்தாலங்குறிச்சி
மதுரையைச் சேர்ந்த வணிகர் ஒருவரின் மனைவிக்கு தலைப்பிரசவத்திற்கான நேரம் வந்தது. பெண்ணின் தாய்வீட்டில் வசதியில்லை. வணிகக் கணவனும் மனைவியை திட்டித்தீர்த்தார். மனமுடைந்த கர்ப்பிணி தாமிரபரணியில் இலக்கில்லாது நடந்தாள். நாக்கு வறண்டது. பிரசவ வலி எடுத்தது. அம்மா தாயே… என்னைக் காப்பாற்று என்று வீழ்ந்தாள். அங்கு வந்த வயதான பெண்மணி அவளை அள்ளிச்சென்று பிரசவம் பார்த்தாள். மனைவியைக் காணாது தேடினான் கணவன். அப்போது இந்தப் பக்கம் வந்தபோது திடீரென ஒரு சிறுமி தோன்றி அதோ உன் மனைவி அங்கிருக்கிறாள் என்று கூறி குடிசையைக் காட்டினாள்.
உள்ளே குழந்தையோடு இருந்த மனைவியிடம் மன்னிப்பு கோரினார். பிரசவம் செய்வித்த பெண்மணிக்காக நன்றி கூற காத்திருந்தனர். இரவும் வந்தது. அங்கேயே தூங்கினர். அன்று இரவே கனவில் அன்னை சிரித்தாள். நான் குணவதி அம்மன் என்று இனிமையான தன் திருப்பெயரைக் கூறினாள். மறுநாள் சிறுமியைத் தேடினார்கள். அவள் மாயமானதை உணர்ந்தார்கள்.
நல்ல பிள்ளை பெற உதவியவளை நல்ல பிள்ளை பெற்ற குணவதியம்மன் என்றே அழைத்தார்கள். இன்றும் சுகப்பிரசவம் ஆகவேண்டும் என்று வேண்டிக்கொண்டு குழந்தையோடு கோயிலுக்கு வருபவர்களை காணலாம். நெல்லை – திருச்செந்தூர் பிரதான சாலையில் செய்துங்கநல்லூர் என்னும் இடத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. ஆட்டோ மற்றும் டவுன் பஸ் வசதி உண்டு.
பழவந்தாங்கல் வேம்புலியம்மன்
ஒரு காலத்தில் வயல்வெளியாக இருந்தது பழவந்தாங்கல். விவசாய வேலை செய்யும் மக்கள் களைப்பு நீங்க அங்கிருந்த ஒரு வேப்ப மரத்தடியில் ஓய்வாக அமரும்போது மனக்கவலைகள் எல்லாம் நீங்குவதை உணர்ந்தார்கள். அந்த இடத்தில் அமர்ந்து குறையாய்ப் பகிர்ந்துகொள்ளும் எதுவும் உடனே சரியாவதைக் கண்டு வியந்தார்கள்.
யார் நிகழ்த்தும் அதிசயம் இது என வியந்து யோசித்த போது ஒரு பெண்ணுக்கு அருள் வந்து, ‘தான் வேம்புலி அம்மன் என்றும் தனக்கு ஆலயம் அமைத்து வழிபட எல்லையில் அமர்ந்து எழிலாய் குலம் காத்து தழைக்கச் செய்வேன்’ என்று அன்னை வாக்களித்தாள். அதன்படி அமைந்த இத்தல தேவி தன்னை நாடியவர்களின் வாழ்வை நலம்பெறக் காத்தருள்கிறார்கள்.
ஆண்டு தோறும் ஆடி மாதம் அன்னையின் தலத்தில் கோலாகலமாக தீமிதி திருவிழா நடைபெறும். சுமார் ஐந்தாயிரம் பேர் கலந்துகொண்டு அம்மன் அருள் பெறுவார்கள். சென்னையில் பழவந்தாங்கல் ரயில் நிலையம் அருகிலேயே இருக்கிறது இத்தலம்.
தளவாய்புரம் துர்க்கை
பொதுவாக சிவாலய கோஷ்டத்தில்தான் துர்க்கை அமர்ந்திருப்பாள். அபூர்வமாக சில தலங்களில் மூலவராக தனிக்கோயில் கொண்டிருப்பாள். அப்படிப்பட்ட ஓரு தலம்தான் தளவாய்புரம். துர்க்கை அம்மன் இங்கு நான்கு திருக்கரங்களுடன் கிழக்குத் திசை நோக்கி சாந்த சொரூபிணியாக வீற்றிருக்கிறாள். பௌர்ணமி தினத்தன்று வியாபாரம் செழிக்கவும், குழந்தை பாக்கியத்திற்காகவும் என்று பிரத்யங்கரா யாகம் நடைபெறுகிறது. மிளகாய் வற்றல் யாகத்தின்போது சிறு கமறல் கூட இருக்காது. இந்த யாகத்தில் ஆயிரக் கணக்கில் மக்கள் கலந்துகொள்கிறார்கள். மதுரை-திருநெல்வேலி ரயில்பாதையில் கோவில்பட்டி ரயில்நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து கயத்தாறு செல்லும் பாதையில் பயணித்தால் தளவாய்புரத்தை அடையலாம்.
தொகுப்பு: விஜயலட்சுமி