சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.38 லட்சம் ஹவாலா பணத்தை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். ஆந்திராவில் இருந்து சென்னை எழும்பூருக்கு நேற்று விரைவு ரயில் ஒன்று வந்தது. அப்போது, எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரயில் நிலையத்தில் நின்ற ரயிலில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த ரயிலில் உள்ள ஒரு பெட்டியில் சந்தேகத்திற்கிடமாக இருந்த பையை எடுத்து சோதனை நடத்தினர்.
இதில், ரூ.38 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பணத்தை கொண்டு வந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நரேஷ் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அந்த நபரை ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அந்த நபரிடம் பணத்துக்கான ஆதாரத்தை போலீசார் கேட்டதற்கு அந்த நபரிடம் முறையான ஆதாரங்கள் இல்லை என்பது தெரியவந்தது. மேலும், அந்த பணம் ஹவாலா பணம் என்பது தெரியவந்தது. இதை அடுத்து, அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அந்த நபரை கைது செய்தனர். மேலும், அந்த நபர் கொண்டு வந்த ரூ.38 லட்சம் ஹவாலா பணத்தை வருமான வரித்துறை அதிகாரியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.