Tuesday, June 24, 2025
Home செய்திகள் மறுசீரமைப்பு திட்டத்தில் விமான நிலைய அமைப்பிற்கு மாறுகிறது எழும்பூர் ரயில் நிலையம்

மறுசீரமைப்பு திட்டத்தில் விமான நிலைய அமைப்பிற்கு மாறுகிறது எழும்பூர் ரயில் நிலையம்

by Neethimaan

* அடுத்த ஆண்டு பயன்பாட்டிற்கு வருகிறது
* தெற்கு ரயில்வே அதிகாரி தகவல்

சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பு திட்டத்தில், விமான நிலைய அமைப்பை போல் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை எழும்பூர் ரயில் நிலையம் சென்னை நகரத்தின் அழகிய கோதிக் பாணி கட்டிடக் கலையை உடைய, கம்பீரமான குவிமாடங்கள் மற்றும் நடைபாதைகளைக் கொண்ட ஒரு அரிய கட்டமைப்பாகும். 114 ஆண்டுகள் பழமையான இந்த நிலையம், தெற்கு ரயில்வேயின் இரண்டாவது முக்கிய முனையம்.தினமும் 562 திட்டமிடப்பட்ட ரயில்களை (442 புறநகர் ரயில்கள் மற்றும் 120 மெயில்/எக்ஸ்பிரஸ் ரயில்கள்) கையாள்கிறது. மேலும் பீக் நேரத்தில் சராசரியாக 24,600 பயணிகள் பயன்படுத்தும் நிலையமாக உள்ளது. இந்த நிலையம், பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பையும், நவீன பயணிகளின் எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மறுசீரமைக்கப்பட உள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக எழும்பூர் ரயில் நிலையம் இருக்கிறது. இந்த ரயில் நிலையத்தை உலகத் தரத்துக்கு மேம்படுத்த தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, எழும்பூர் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பு பணி ஐதராபாத்தைச் சேர்ந்த டெக் இன்ப்ராஸ்ட்ரக்சர் அண்ட் ப்ராஜெக்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு ரூ.734.91 கோடியில் ஒப்பந்தமாக வழங்கப்பட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் லிமிடெட் நிறுவனம், ரூ.14.56 கோடி செலவில் திட்ட மேலாண்மை சேவைகளை மேற்கொள்ள அமர்த்தப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையத்திற்கு மொத்தம் இரண்டு முனையங்கள் கட்டப்பட உள்ளன. ஒன்று காந்தி இர்வின் சாலை பக்கத்தில், மற்றொரு பூந்தமல்லி நெடுஞ்சாலை சாலை பக்கத்தில்.

இரு பக்கங்களிலும் உள்ள முனையக் கட்டிடங்கள் 3 அடுக்கு கட்டிடங்களாக, உலகத் தரம் வாய்ந்த வசதிகளான காத்திருப்பு இடம், டிக்கெட் விற்பனை பகுதி, வணிகப் பகுதி மற்றும் ரூப் பிளாசா போன்றவற்றுடன் கட்டப்பட உள்ளன. பயணிகளின் புறப்பாடு மற்றும் வருகையை பிரித்தல், பார்சல், லிப்ட்கள் மற்றும் எஸ்கலேட்டர்கள் இந்த கட்டிடத்தில் திட்டமிடப்பட்டுள்ளன. காந்தி இர்வின் பக்கம் மற்றும் பூந்தமல்லி பக்கம் இரண்டிலும் 5 அடுக்கு வாகன நிறுத்துமிடங்கள் கட்டப்பட உள்ளன. இவற்றில் வணிகப் பகுதி, கார் மற்றும் இரு சக்கர வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் பட்ஜெட் ஓட்டல் ஆகியவை அடங்கும். பூந்தமல்லி பக்கத்தில் உள்ள புதிய பார்சல் அலுவலகம் 2 அடுக்கு கட்டிடங்களாக, பார்சல் அலுவலகம் கட்டப்பட உள்ளது. இந்த முழு திட்டமும் 13 துணை திட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு துணைத் திட்டங்களின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் இந்த மாத இறுதிக்குள் தொடங்கப்பட உள்ளன.

13 துணைத் திட்டங்கள்:
1நிலையக் கட்டிடங்கள்
2பல அடுக்கு வாகன நிறுத்துமிடங்கள்
3காந்தி இர்வின் சாலை பக்கத்தில் வணிக இடம்
4பூந்தமல்லி நெடுஞ்சாலை பக்கத்தில் வணிக இடம்
5புதிய பார்சல் அலுவலகம்
6 72 மீட்டர் அகலமுள்ள புறப்பாடு பகுதி
7 36 மீட்டர் அகலமுள்ள வருகை பகுதி மற்றும் பயணப்பாதை
812 மீட்டர் அகலமுள்ள வருகை மேம்பாலம்
9தளவாடங்களுக்கு மேல் முழுமையான கூரை
10பார்சல்களை கையாள 6 மீட்டர் அகலமுள்ள மேம்பாலம்
11புதிய மின்சார துணை மையம்
12புதிய ரயில்வே குடியிருப்புகள் கட்டுமானம்
13வெளிப்புற பொறியியல் மறுசீரமைப்பு பணிகள்

இப்படி 13 துணை திட்டங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரி கூறியதாவது: சென்னை எழும்பூரின் முதன்மை நுழைவாயில் காந்தி-இர்வின் சாலையிலும், பின்புற நுழைவாயில் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் அமைந்துள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பு திட்டம், தற்போதைய நிலையக் கட்டிடத்தின் இரு பக்கங்களிலும், அதாவது காந்தி-இர்வின் மற்றும் பூந்தமல்லி சாலை பக்கங்களில், மொத்தம் 1,35,406 சதுர மீட்டர் கட்டப்பட்ட பரப்பளவில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மறுசீரமைப்பு, தற்போதைய கட்டமைப்பின் பாரம்பரிய மதிப்பை தக்கவைத்து, நவீன உயர்நிலை வசதிகளுடன் ஒரு சிறப்புமிக்க கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

எல்லா தளவாடங்களுக்கும் எஸ்கலேட்டர்கள் மற்றும் லிப்ட்டுகள் மூலம் இணைப்பு வசதி செய்யப்பட்டு, குறிப்பாக எழும்பூர் மெட்ரோ நிலையத்துடன் இணைப்பு வழங்கப்படும். நிலையத்தில் கூடுதல் கழிவறைகள், குடிநீர், நிழல் உள்ள இருக்கைகள், எஸ்கலேட்டர்கள், லிப்ட்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த வசதிகள் மேம்படுத்தப்படும். இது விமான நிலையங்களில் உள்ள அமைப்பை ஒத்திருக்கும். பயணிகளின் எளிதான நகர்வுக்கு உதவ மற்றும் பார்சல்களை கையாள மூன்று மேம்பாலங்கள் தனித்தனியாக கட்டப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

பல அடுக்கு வாகன நிறுத்துமிடங்கள்
ரயில் நிலையத்தின் இரு பக்கங்களிலும் பல அடுக்கு வாகன நிறுத்துமிடங்கள் 5 அடுக்கு கட்டப்படும். காந்தி-இர்வின் சாலை பக்கத்தில் 19,362 சதுர மீட்டரும், பூந்தமல்லி சாலைப் பக்கத்தில் 18,020 சதுர மீட்டரும் மொத்த கட்டப்பட்ட பரப்பளவாக இருக்கும். கார்கள், டாக்சிகள், தனியார் 2 சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ-ரிக்ஷாக்களுக்கு வாகன நிறுத்துமிட வசதிகள் வழங்கப்படும். இறக்குதல்/ஏற்றுதல் பகுதிகளுக்கு தனித்தனி பாதைகள் வழங்கப்பட்டு, மோதல் இல்லாத தர்க்கரீதியான நகர்வு உறுதி செய்யப்படும்.

கலைஞர் பெயர் சூட்ட வாய்ப்பு
எழும்பூர் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக கட்டப்படும் பல்வேறு கட்டிடங்களின் மேற்கூரைகளில் 2950 கிலோவாட் உச்சநிலை திறன் கொண்ட சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்தப்படும். இந்த பணிகள் அனைத்தும் அடுத்த வருடத்திற்குள் முடித்து பயணிகள் வசதிக்காக பயன்படுத்தப்பட உள்ளது. மேலும், எழும்பூர் ரயில் நிலையத்தை சீரமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட செய்ய நிறுவனம் 3 மாதத்திற்கு சில நடைமேடைகளை சீரமைக்க கேட்டுள்ளது. அதாவது, குறிப்பிட்ட நடைமேடையில் இருந்து இயக்கப்படும் ரயில்களை சென்னை சென்ட்ரல் அல்லது தாம்பரம் ரயில் நிலையத்திற்கு மாற்ற அந்த நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. இதனால், பயணிகளுக்கு அலைச்சல் என்பதால், ரயில்வே நிர்வாகம் வேறு திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்துள்ளது. எழும்பூர் ரயில் நிலையம் மறுசீரமைப்பு பணிகள் முடிந்ததும் கலைஞர் பெயர் சூட்டப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பல்வகை போக்குவரத்து வசதிகள்
இந்த திட்டம், சென்னை நகரத்தின் சுற்றுப்புறத்துடன் ரயில் நிலையத்தின் ஒத்திசைவான மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு, ஆட்டோ, கார், பஸ் போன்ற போக்குவரத்து பயணிகள் ஏறுதல்/இறங்குதல் பாயிண்ட்களுக்கு இடையே நடை பயணிகளுக்கு தடையற்ற பயணத்தை வடிவமைக்கிறது. பயணிகளுக்கு எளிதான மற்றும் வசதியான பல்வகை போக்குவரத்து இணைப்பு வசதிகளை வழங்க, சுற்றுப்பகுதிகள் வசதியாகவும் அழகியலுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

எஸ்கலேட்டர்கள் மற்றும் லிப்டுகள்
மறுசீரமைக்கப்பட்ட நிலையத்தின் பல்வேறு இடங்களில் 32 எஸ்கலேட்டர்கள் மற்றும் 47 லிப்டுகள் கட்டப்பட உள்ளன.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi