சென்னை: இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வு எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று காலை தொடங்கியது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட வாரியாக உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி சென்னை மாவட்டத்திற்கான இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான உடல் தகுதி தேர்வு எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று காலை 6 மணிக்கு தொடங்கியது. இதற்காக வெளிமாவட்டங்களில் இருந்து நேற்று முன்தினம் இரவு முதலே எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மைதானம் முன்பு குவிந்தனர்.
பின்னர் நேற்று காலை 6 மணிக்கு தொடங்கிய உடல் தகுதி தேர்வில் ஆண்களுக்கு 1500 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் ஓட்டம் நடந்தது. பிறகு 5.0 மீட்டர் உயர கயிறு ஏறுதல், 3.80 மீட்டர் நீளம் தாண்டுதல், 1.20 மீட்டர் உயரம் தாண்டுதல் போட்டிகள் நடந்தன. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இறுதியாக அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல் நடைபெறும்.
இந்த உடல் தகுதி போட்டி வரும் 30ம் ேததி வரை, அதாவது 4 நாட்கள் நடக்கிறது. உடல்தகுதி போட்டியில் 656 ஆண்கள் மற்றும் 509 பெண்கள் கலந்துகொள்கின்றனர்.