சென்னை: எழும்பூர்-நாகர்கோவில், மதுரை-பெங்களூர் கண்டோன்மென்ட் ஆகிய இரண்டு வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார். இதன் வழக்கமான சேவை செப்டம்பர் 2ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. சென்னையில் இன்று இரண்டு புதிய வந்தே பாரத் ரயில்களை காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார். இதன் துவக்க விழா சென்னையில் நடைபெறும் நிலையில், இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், சென்னை மேயர் மற்றும் சென்னை மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
அதாவது, சென்னை எழும்பூர் – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் துவக்க நாளில், சென்னையில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு இரவு 09.30 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். அதேபோல, மதுரை – பெங்களூர் கண்டோன்மென்ட் வந்தே பாரத் ரயில் துவக்க நாளில், மதுரையில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு இரவு 09.30 மணிக்கு பெங்களூர் சென்று சேரும். மதுரையில் நடைபெறும் இதன் துவக்க விழாவில், ஒன்றிய ரயில்வே துறை மற்றும் ஜல் சக்தி துறை இணை அமைச்சர் வி.சோமன்னா, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மேயர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
எழும்பூர்-நாகர்கோவில் வந்தேபாரத் இந்த ரயில்களின் வழக்கமான சேவை செப்டம்பர் 2 முதல் துவங்க இருக்கிறது. அதன்படி, சென்னை எழும்பூர் – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் (20627), சென்னை எழும்பூரில் இருந்து புதன்கிழமை தவிர மற்ற வார நாட்களில் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு, மதியம் 01.50 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். மறு மார்க்கத்தில் நாகர்கோவில் – சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயில் (20628) நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.
இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். எழும்பூரிலிருந்து காலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரயில், தாம்பரத்தில் 5.23/5.25,விழுப்புரத்தில் 6.52/6.55, திருச்சியில் 8.55/9,திண்டுக்கல் 9.53/9.55,மதுரை 10.38/10.40,கோவில்பட்டி 11.35/11.37,நெல்லை 12.30/12.32 ஆகிய மணி நேரங்களில் நின்று செல்லும். அதிகப்பட்சமாக திருச்சியில் மட்டும் 5 நிமிடம் நின்று செல்லும், மற்ற ரயில் நிலையங்களில் 2 நிமிடம் நின்று செல்லும்.
மறுமார்க்கமாக நாகர்கோவிலிருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்படும் இந்த ரயில் நெல்லைக்கு மதியம் 3.18,கோவில்பட்டிக்கு 3.58,மதுரைக்கு 5.3,திண்டுக்கல் 5.48,திருச்சி 6.45,விழுப்புரம் 8.53, தாம்பரம் 22.28, இறுதியாக எழும்பூருக்கு 11 மணிக்கு வந்தடைகிறது. மதுரை – பெங்களூர் கண்டோன்மென்ட் மதுரை – பெங்களூர் கன்டோன்மெண்ட் வந்தே பாரத் ரயில் (20671), செப்டம்பர் 2 முதல் மதுரையில் இருந்து செவ்வாய்க்கிழமை தவிர மற்ற வார நாட்களில் அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு பெங்களூரு கண்டோன்மெண்ட் சென்று சேரும்.
மறு மார்க்கத்தில், பெங்களூரு கண்டோன்மெண்ட் – மதுரை வந்தே பாரத் ரயில் (20672), பெங்களூரு கண்டோன்மெண்ட்டில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மதுரையில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்பட்டு, திண்டுக்கல்லில் 5.59/6.1, திருச்சியில் 6.50/6.55,கரூர் 8.8/8.10,நாமக்கலில் 8.32/8.34,சேலம் 9.15/9.20,கிருஷ்ணராஜபுரம் 12.50/12.52 மணிக்கு நின்று இறுதியாக 1 மணிக்கு பெங்களுரு செல்லும். மதுரையிலிருந்து, பெங்களுருக்கு ரூ.1575, 2865 என டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு
இன்று நடைபெற உள்ள துவக்க நாளில், ரயில்கள் நிற்கும் ரயில் நிலையங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மக்கள் பிரதிநிதிகள், பயணியர் சங்கத்தினர், மாணவர்கள், முக்கிய பிரமுகர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். முக்கிய பிரமுகர்கள், சில மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு இந்த துவக்க நாள் சிறப்பு ரயிலில் பயணம் செய்ய சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் 2 மணி நேரத்தையும், மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் 1 மணி நேரம் 30 நிமிடத்தையும் பயணத்தை மிச்சப்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* சென்னை-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் ரயில் டிக்கெட் கட்டணம்
* ஏசி சேர் கார் மற்றும் எக்சிகியூட்டிவ் சேர் கார் இருக்கையின் கட்டண விபரம்
எழும்பூர்-தாம்பரம் ரூ.380, ரூ.705
எழும்பூர்-விழுப்புரம் ரூ.545,ரூ.1055
எழும்பூர்-திருச்சி ரூ.955,ரூ.1790
எழும்பூர்-திண்டுக்கல் ரூ.1105,ரூ.2110
எழும்பூர்-மதுரை ரூ.1200,ரூ.2295
எழும்பூர்-கோவில்பட்டி ரூ.1350,ரூ.2620
எழும்பூர்-நெல்லை ரூ.1665,ரூ.3055
எழும்பூர்-நாகர்கோவில் ரூ.1760,ரூ.3240