நன்றி குங்குமம் தோழி
முகச்சுருக்கம், முகப்பரு நீங்கவும், எண்ணெய் வடிதலை தடுக்கவும் என்று கூறி விற்பனையாகும் அழகுக் கிரீம்களின் விலை சாதாரண மக்கள் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அளவில் உள்ளது. ஆனால் அதைவிடச் சிறந்த அதே நேரத்தில் மலிவானக் கிரீமை தேவையான போது வீட்டிலேயே தயாரித்து பயன் பெறலாம்.
முகச்சுருக்கம் நீங்க: முட்டையை உடைத்து வெள்ளைக் கருவை தனியே பிரித்து எடுத்துக் கொள்ளவும். மேஜைக்கரண்டி வெள்ளைக் கருவுடன், தேக்கரண்டி கலப்படம் இல்லாத தேனை பசை போலக் கலந்து முகம் முழுவதும் தாராளமாகப் பூசி ஊறவிடவும். சுமார் அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி விடவும். வாரம் 2(அல்லது)3 முறை செய்து வந்தால் சுருக்கம் நீங்கி முகம் பளபளப்பாகும்.
முகப்பருக்கள் மறைய: ஒரு தேக்கரண்டி முட்டைக் கருவுடன் சில துளிகள் பன்னீர், சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து, முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து தண்ணீரால் கழுவவும். வாரம் இருமுறை தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக முகப்பருக்கள் மறைவதை காணலாம்.
எண்ணெய் வழிகிறதா?
சிலருக்கு முகத்தில் எண்ணெய் வழிவது போல் இருக்கும். இவர்கள் ஒரு தேக்கரண்டி முட்டை வெள்ளைக் கருவுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு, சில துளிகள் தக்காளி பழச் சாறு கலந்து முகத்தில் தடவி ஊறவிட்டு குளிர்ந்த நீரால் கழுவவும். முகத்தில் அதிகமாகச் சுரக்கும் எண்ணெய் பிசுபிசுப்பை இது குறைத்து விடும்.
– என்.குப்பம்மாள், கிருஷ்ணகிரி.