சென்னை: சென்னை பெரியமேட்டில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவர் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சர்வதேச அளவிலான கால்நடை பராமரிப்பு மற்றும் வளர்ப்பு தொடர்பான கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு துறை செயலாளர் சுப்பையன் பேசியதாவது: தகவல் தொழில்நுட்பத்திற்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தை போல் கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு துறைக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சர்வதேச அளவிலான கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு தொழில்நுட்பங்களை பரிமாறிக் கொள்ளும் வகையில் இந்த கருத்தரங்கு நடக்கிறது.
ஆடு, மாடு, நாட்டுக் கோழி விலையை அரசு நிர்ணயம் செய்வதற்கு திட்டம் உள்ளதா என கேட்கின்றனர். ஆடு, கோழி விற்பனை விலையை அறிவிக்கும் வகையில் புதிய போர்டல் தயாராகி வருகிறது. ஆடு, நாட்டுக்கோழி விலை நிர்ணயம் செய்ய தனி அமைப்பு உருவாக்கி போர்ட்டல் மூலம் வெளியிட உள்ளோம். நாமக்கலில் எப்படி முட்டை விலை தனியார் அமைப்பு மூலமாக நிர்ணயம் செய்யப்படுகிறதோ, அதேபோல தனி அமைப்பை உருவாக்க திட்டமிட்டு வருகிறோம். விரைவில் ஆடு, கோழி இறைச்சியின் விலை அப்டேட் ஆகும் வகையில் விலை நிர்ணயம் செய்து போர்டலில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.