மும்பை: மும்பையைச் சேர்ந்த ஒரு தம்பதி வாடகைத்தாய் மூலமாக இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்தனர். பெண்ணின் தங்கையே வாடகைத்தாயாக இருந்து, 2019ல் குழந்தையை பெற்றெடுத்து கொடுத்தார். அடுத்த சில மாதங்களிலேயே அந்த தங்கையின் கணவரும் குழந்தைகளும் சாலை விபத்தில் இறந்துவிட்டனர். இதனால் மனமுடைந்த பெண், தனது அக்கா குடும்பத்துடனேயே வசித்து வந்தார்.
இந்த சூழலில் 2021ல் தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டு அவர்கள் பிரிந்தனர். பெண்ணின் கணவர் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி வேறு வீட்டில் குடியேறி விட்டார். குழந்தைகளை பராமரிப்பதற்காக பெண்ணின் தங்கையும் அவர்களுடன் சென்றுவிட்டார். அதன் பிறகு, அவர்கள் குழந்தைகளை பார்க்க பெண்ணை அனுமதிக்கவில்லை .
இதனால் பாதிக்கப்பட்ட பெண், குழந்தைகளை தன்னிடம் வழங்கக் கோரி உள்ளூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து அவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கு நேற்று நீதிபதி மிலிந்த் ஜாதவ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘‘மனுதாரரின் தங்கை கருமுட்டை தானம் செய்தவர் என்றாலும் கூட அவர் குழந்தைகளின் தாய் என்று உரிமை கோர முடியாது என்று தெரிவித்தார். சட்டப்படி, கருமுட்டை தானம் செய்பவர்கள் நன்கொடையாளர் தானே தவிர, அதற்கு மேல் எந்த அந்தஸ்தும் அவர்களுக்கு கிடையாது’’ என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
குழந்தைகளை தாயிடம் ஒப்படைப்பது தொடர்பாக சட்டப்பூர்வமாக வழிகாட்டுதலை பெற ஒரு வழக்கறிஞரையும் நியமித்தார்.