திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியிலிருந்து திருப்போரூர் வட்டம், முட்டுக்காட்டில் உள்ள புராதன சின்னமான தட்சணசித்ராவினை மாணவ, மாணவியர்கள் பார்வையிடுவதற்கான கல்வி சுற்றுலா வாகனங்களை மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த சுற்றுலாவில் திருப்போரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலிருந்து 300 மாணவிகள், திருப்போரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலிருந்து 350 மாணவர்கள், கேளம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியிலிருந்து 150 மாணாக்கர், கேளம்பாக்கம் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியிலிருந்து 50 மாணவிகள் சென்றனர்.
மேலும், கோவளம் அரசு மேல்நிலைப்பள்ளியிலிருந்து 200 மாணாக்கர், நெம்மேலி அரசு மேல்நிலைப்பள்ளியிலிருந்து 75 மாணாக்கர், மாமல்லபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலிருந்து 75 மாணாக்கர், பையனூர் அரசு உயர்நிலைப்பள்ளியிலிருந்து 75 மாணாக்கர், சிறுதாவூர் அரசு உயர்நிலைப்பள்ளியிலிருந்து 75 மாணாக்கர், இள்ளலூர் அரசு உயர்நிலைப் பள்ளியிலிருந்து 75 மாணாக்கர் என மொத்தம் 1,425 மாணவ, மாணவியர்கள் 20 பேருந்துகளில் சென்றனர். கல்வி சுற்றுலா செல்லும் மாணவ, மாணவிகளிடம் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் கலந்துரையாடி சுற்றுலாவின் நோக்கம் குறித்தும் தெரிவித்தார்.
சுற்றுலா செல்லும் மாணவ, மாணவியர்கள் சுற்றுலா தலங்களில் தாங்கள் தெரிந்துகொண்டதை குறிப்பெடுத்து தெரிவிக்குமாறு கூறினார். சிறந்த தகவல்களை கூறிய மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்குமாறு பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், திருப்போரூர் பேரூராட்சித் தலைவர் தேவராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் உதயகுமார், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் அஸ்கர் அலி, தலைமை ஆசிரியை தெமீனா கிரானேப் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.