சென்னை: சென்னையில் 3 மாத கோர்ஸ் படித்தால் வேலை வாங்கி தருவதாக கூறி மாணவர்களின் பெயரில் கடன் வாங்கி ஏமாற்றிய தனியார் நிறுவனம் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் அளித்த புகார் மனுவில், ஸ்கில் லிங் என்ற நிறுவனம் மோசடி செய்ததாக குற்றம்சாட்டியுள்ளனர். 3 மாத ஆன்லைன் கோர்ஸ் முடித்தால் வேலை வாங்கி தருவதாக கூறி தங்களிடம் கட்டணத்தையும் பெற்றுவிட்டு முறையாக பாடமும் நடத்தவில்லை என மாணவர்கள் கூறுகின்றனர்.
தாங்கள் வழங்கிய ஆவணங்களை கொண்டு தங்கள் பெயரிலேயே தனியார் நிதி நிறுவனத்தில் ஸ்கில் லிங் நிறுவனம் கடன் பெற்றதாக தெரிவித்த மாணவர்கள், கடனை திருப்பி செலுத்த கூறி சம்பந்தப்பட்ட நிறுவனம் மிரட்டுவதாகவும் கூறினர். கடன் தருவதாகவும், ஏடிஎம் கார்டுகளை புதுப்பிப்பதாகவும் கூறி புது புது முறைகளில் முறைகேடுகள் அரங்கேறி வந்தன. இந்த நிலையில் கல்வி வழங்குவதாக கூறி மாணவர்கள் பெயரிலேயே கடன் பெற்று அரங்கேறிய மோசடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.