சென்னை: கல்வி மற்றும் நூல் வாசிப்பு, நுண் கலைகள், விளையாட்டு மற்றும் அறிவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் 22 மாணவர்கள் ஆசிரியர், அலுவலர் உட்பட 24 பேர் ஜெர்மனிக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர் என்று பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட அறிக்கை: பள்ளி அளவில் கல்வி மற்றும் நூல் வாசிப்பு, நுண் கலைகள், விளையாட்டு மற்றும் அறிவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்படி 2022-23ம் கல்வியாண்டில் 142 மாணவர்கள் ரூ.3 கோடியில் மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் தென்கொரியா நாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். அதைப்போன்று 2023-24ம் கல்வியாண்டில் 114 மாணவர்கள் சிங்கப்பூர், ஹாங்காங் நாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். மாணவர்கள் தங்கள் பயணங்களில் இருந்து விரிவான அனுபவத்தையும், அறிவையும் பெற்றனர். தொடர்ந்து நடப்பாண்டில் 22 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர், அலுவலர் என மொத்தம் 24 பேர் ஜெர்மனிக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.
இந்த சுற்றுலாவின் போது ஜெர்மனியில் உள்ள முனிச் பல்கலைக்கழகம், அருங்காட்சியகம், உள்ளிட்ட பல்வேறு இடங்களை பார்வையிடுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் கல்விச் சுற்றுலாவுக்காக மாணவர்கள் சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை புறப்பட்டுச் சென்றனர். தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஸ் நாளை (திங்கள்) ஜெர்மனிக்கு புறப்பட்டு சென்று மாணவர்களுடன் இணைந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.