சென்னை: கல்விதான் உங்களிடத்திலிருந்து பிரிக்க முடியாத சொத்து என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் முத்தமிழறிஞர் கலைஞர் ஆறாம் ஆண்டு நினைவு நாளையொட்டி பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா, நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஒரு கோடியே 8 லட்சம் ரூபாய் அளவிலான கல்வி உதவித் தொகையை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அப்போது பேசிய அவர்; மாணவர்களுக்கு கல்வியே சிறந்த செல்வம்’ என்று குறிப்பிட்டார்.
தொடந்து நான்காவது வருடமாக, பள்ளிகள் மற்றும் பள்ளிக் குழந்தைகளுக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்குகிற நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். மாணவச் செல்வங்களான உங்களையெல்லாம் சந்திப்பது, என் மனதுக்கு மிகவும் நெருக்கமான நிகழ்ச்சி. இங்கு மாவட்டக் கழகச் செயலாளர் சிற்றரசு, `தமிழ்நாட்டிலேயே அதிகமான கல்வி ஊக்கத் தொகை வழங்குகிற சட்டமன்ற உறுப்பினர்’ என்று என்னைக் குறிப்பிட்டுப் பேசினார். அதில் ஒரு சின்ன திருத்தம். கல்வி உதவித்தொகையை என்னைவிட அதிகமாக ஒருவர், அவரின் சட்டமன்றத் தொகுதியாக இருந்தாலும் சரி, தமிழ்நாடு முழுக்க என்றாலும் சரி, வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார், அவர்தான் நம் முதலமைச்சர்.
அவர் எப்போதுமே சொல்வார். `கல்விக்கும் மருத்துவத்திற்கும் முக்கியத்துவம் தரும் அரசு இந்த திராவிட மாடல் அரசு’ என்று. அதேபோல், அவர் இன்று தமிழ்நாட்டில் இருக்கிற அனைத்து மாணவர்களுக்கும் பல்வேறு திட்டங்களை, குறிப்பாக `பெண்கள் படிக்க வேண்டும், வீட்டைவிட்டு வெளியே வரவேண்டும், உயர்கல்வி படிக்க வேண்டும்’ என்ற எண்ணத்தில் பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். உதாரணத்திற்கு, குழந்தைகளை முதலில் பள்ளிக்கூடத்திற்கு வரவைக்க வேண்டும் என்று `முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. அவர்கள் பள்ளிக்கூடத்திற்கு வந்தால் போதும், காலையில் அவர்களுக்குத் தரமான உணவு கொடுக்கப்படும்.
இப்போது இந்தத் திட்டத்தைப் பல்வேறு மாநிலங்களில் விரிவுபடுத்தியுள்ளார்கள். ஏனென்றால், தமிழ்நாட்டில்தான் அதிகமான குழந்தைகள் படிப்பதற்கு வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால், உயர் கல்வியில் படிக்கிற மாணவர்களின் எண்ணிக்கை இந்தியாவிலேயே 51 சதவிகிதம் பெற்று தமிழ்நாடுதான் முதல் இடத்தில் உள்ளது. அதற்குக் காரணம் நம் `திராவிட மாடல்’ அரசு. அதேபோல கோவிட் காலத்தில் `இல்லம் தேடி கல்வி’ என்ற திட்டம். `புதுமைப்பெண்’ என்ற திட்டத்தில் அரசுப் பள்ளியில் படித்து எந்தக் கல்லூரியில் சென்று படித்தாலும், அந்த மாணவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து வருகிற 9-ஆம் தேதி முதல் மாணவிகளுக்கு எப்படி `புதுமைபெண்’ திட்டமோ, அதேபோல் மாணவர்களுக்கும் `தமிழ்ப்புதல்வன்’ என்ற திட்டம் தொடங்கப்படவிருக்கிறது.
அரசுப் பள்ளியில் படித்து, எந்தக் கல்லூரியில் சென்று உயர்கல்வி படித்தாலும் மாதம் ஆயிரம் ரூபாய் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும். இப்படி பல்வேறு திட்டங்களை நம் முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து விரிவுபடுத்திக் கொண்டே இருக்கிறார். கல்விக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதற்கு எடுத்துக்காட்டாகத்தான் இப்படி ஒரு சிறப்பான நிகழ்ச்சி, நம் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 6-வது நினைவு நாளில், இங்கு நடந்து கொண்டிருக்கிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாகவே, கலைஞரின் நினைவு நாளையொட்டி நம் தொகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்குக் கல்வி உதவித்தொகையை வழங்கி வருகிறோம். இன்றைக்கு நான்காவது ஆண்டாக கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இது கல்வி உதவித்தொகை வழங்குகிற நிகழ்ச்சி என்றாலும், இந்த நேரத்தில் நம் தொகுதியில் இருப்பவர்களுக்கு, நம் கழகத்தின் நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பகுதிக் கழகச் செயலாளர்கள், வட்டக் கழகச் செயலளார்கள் அனைத்து அணி நிர்வாகிகள், அமைப்பாளர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். அதற்குக் காரணம், உங்களுக்குத் தெரியும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான, நம் தலைவர் தலைமையிலான `இந்தியா’ கூட்டணி 40 க்கு 40 தொகுதிகள் வெற்றி பெற்றது என்றால், அதற்கு முக்கிய காரணம், இங்கு வந்திருக்கிற வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள்தான். அதிலும், இந்த சென்னை மேற்கு மாவட்டத்தில் இருக்கக்கூடிய அண்ணா நகர், ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய மூன்று தொகுதிகளில் ஒரு போட்டியே வைத்திருந்தோம். யார் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்று காட்டப்போகிறோம் என்று. அதில் வெற்றிபெற வைத்தது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிதான்.
2021-ஆம் ஆண்டு முதல் இந்தக் கல்வி ஊக்கத்தொகையைக் கொடுக்க ஆரம்பித்தோம்.
500 மாணவர்களுக்கு 54 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகையை கொடுக்கத் தொடங்கினோம். அதன் பிறகு 2022-ஆம் ஆண்டில் 100 மாணவர்களுக் 12 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகையை வழங்கி உற்சாகப்படுத்தினோம். சென்ற ஆண்டு நம் தொகுதியைச் சேர்ந்த 600 மாணவர்களுக்கு 69 லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி உதவித்தொகையை வழங்கினோம். அந்த வரிசையில், இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாயும், கல்லூரி மாணவர்களுக் தலா 20 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 855 மாணவர்களுக்கு ரூபாய் 1 கோடியே 8 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகையை இந்த மேடையில் இங்கு வழங்கியிருக்கிறோம்.
இப்படி இந்த தொகுதியைச் சேர்ந்த 2,000 ஆயிரம் மாணவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், கிட்டத்தட்ட 2 கோடியே 43 லட்சம் அளவிற்கு கல்வி உதவித்தொகையை வழங்கியிருக்கிறோம். நம் முதலமைச்சர் எப்போதுமே மாணவர்களிடத்தில் பேசும்போது`மாணவர்களாகிய நீங்கள் எந்தக் கெட்டப் பழக்கத்தை நோக்கியும் போகக்கூடாது. உங்களின் நோக்கம் கல்வி ஒன்றாக மட்டுமே இருக்க வேண்டும்’ என்று சொல்வார். கல்வியோடு சேர்த்து விளையாட்டும் முக்கியம். உடற்பயிற்சி முக்கியம். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். உங்கள் கல்வியை மட்டுமே சிந்திக்க வேண்டும். கல்விதான் உங்களிடத்திலிருந்து பிரிக்க முடியாத சொத்து.
கல்வியே சிறந்த செல்வம். அந்தக் கல்வி உங்களுக்கு வந்து சேர்வதற்கு நம் அரசின் சார்பாக, எப்போதுமே ஒரு தாயாக, தந்தையாக நம் முதலமைச்சர் மாணவர்களுடன் உடன் இருப்பார். இங்கு வந்திருக்கக்கூடிய மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்து, நம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கல்விக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் எந்த நேரத்திலும் செய்வதற்கு நம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறந்திருக்கிறது என்று கூறினார்.