Tuesday, June 25, 2024
Home » 18 ஆசிரியைகளுக்கு ஆபாச படம் அனுப்பிய கல்வி அதிகாரியின் விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

18 ஆசிரியைகளுக்கு ஆபாச படம் அனுப்பிய கல்வி அதிகாரியின் விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

by Ranjith

‘‘தேர்தல் முடிந்த மறுநாளே தொகுதி பக்கம் எட்டிபார்க்காத வேட்பாளரை கிண்டல் அடித்து வருகிறார்களாமே சொந்தக் கட்சியினர்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மக்களவை தேர்தலில் கடலோர தொகுதியில் இலை கட்சி சார்பில் போட்டியிட தனக்கு வேண்டிய நபரை மாஜி அமைச்சர் ‘மணியானவர்’ நிறுத்தி இருந்தார். பிரசாரத்தில் வேட்பாளர் ஈடுபட்டிருந்த போது கடலோர மாவட்டத்தில் விமான நிலையம் அமைப்பேன், துறைமுகம் அமைப்பேன், தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமாக மாற்றுவேன்.

24 மணி நேரமும் என்னை தொகுதியில் பார்க்கலாம் என இஷ்டத்துக்கு அள்ளி விட்டாராம்… ஆனால் தேர்தல் முடிந்த மறுநாளே வேட்பாளரை தொகுதி பக்கமே பார்க்க முடிய வில்லை. வேட்பாளரை போனில் தொடர்பு கொண்டாலும் முடிய வில்லை. தேர்தல் ரிசல்டு முன்னதாகவே வேட்பாளருக்கு தெரிந்து விட்டதால் அவரை தொகுதி பக்கமே பார்க்க முடியவில்லை போல. மாஜி அமைச்சர் மாதிரி தான் அவரது ஆதரவாளரான வேட்பாளரும் இருப்பாரோ என சொந்த கட்சிக்குள்ளே கமாண்ட் அடிக்க தொடங்கிட்டாங்க.

இந்த தகவல் தெரிய வந்த மாஜி அமைச்சர் தனது ஆதரவாளரான வேட்பாளர் மீது உச்ச கட்ட டென்சனில் இருந்து வருகிறாராம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பெண் ஆசிரியர்களுக்கு ஆபாச படம் அனுப்பிய விவகாரத்தில் இடியாப்ப சிக்கலில் சிக்கி தவிக்கும் அதிகாரிகள் பற்றிச் சொல்லுங்க..’’ என கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புரம் என்று முடியும் மாவட்டத்தில் கல்வித்துறை அதிகாரி மீதான பாலியல் புகார் விசாரணையை மூடிமறைச்சிட்டாங்களாம்.

இந்த மாவட்ட கல்வித்துறை அலுவலகத்தில் மேல்நிலைகல்வி ஹெச்எம் கேடரில் நேர்முக உதவியாளராக இருக்கும் ஒருவர், 18 பெண் ஆசிரியர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் ஆபாச படம் அனுப்பி சாட்டிங் செய்ததாக கலெக்டருக்கு புகார் அனுப்பப்பட்டதாம். இதுகுறித்து பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தின்படி மாவட்ட வருவாய் அலுவலர், சமூக நலத்துறை அதிகாரி சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் விசாரணையை நடத்தி முடிச்சிருக்காங்களாம்.

விசாரணையில் பாலியல் ரீதியான ஆபாச படங்களை மேற்கண்ட அதிகாரி அனுப்பி சாட்டிங் செய்தது உறுதி செய்யப்பட்டதாம். ஆனால் விசாரணை முடிவில் சம்மந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்காமல் விசாரணையை அறிக்கையை மாற்றி, சம்பவத்தை மூடிமறைத்து விட்டார்களாம். இதனால் அதிருப்தியில் இருக்கும் பாதிப்புக்குள்ளான ஆசிரியைகள் தவறு செய்த நபருக்கு உறுதுணையாக நிற்கும் மாவட்ட அதிகாரிகள் மீது தலைமை செயலகத்துக்கும், முதல்வர் அலுவலகத்துக்கும் ஆதாரங்களுடன் புகார்களை அனுப்ப தயாராகி வருகிறார்களாம்.

அதற்குள் நடவடிக்கை இருந்தால், மாவட்ட அதிகாரிகள் தப்பித்து விடுவார்கள், இல்லையென்றால் அவர்களும் சிக்குவார்கள் என்று இப்பிரச்சனையை கையில் எடுத்தவர்கள் உறுதியாக இருக்கிறார்களாம். இதனால் மாவட்ட அதிகாரிகள் இடியாப்ப சிக்கலில் உள்ளனர்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தேர்தல்ல வேலை செய்யாம, பதவிய காப்பாத்த கோயில் கோயிலா பரிகாரம் செய்றாங்களாமே இல நிர்வாகிங்க..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் தொகுதியில, சூரியக்கட்சி வேட்பாளருக்கும், தாமரை கூட்டணி வேட்பாளருக்கும் தான் தேர்தலில் போட்டி கடுமையாக இருந்துச்சு.

இல கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் 3வது இடத்துக்கு தள்ளப்படுவார்னு கருத்துகளும், கணிப்புகளும் வெளியானது. இதனால, ஏதோ பெயரளவுக்கு நானும் களத்துல இருக்கிறேன் என்பதை காட்டிக் கொண்டு, இல கட்சி வேட்பாளர் இருந்தாரு. தேர்தலுக்கு கடைசி கொஞ்ச நாளுக்கு முன்னாடி வெயிலூர்ல, இருக்குற இலக் கட்சி முக்கிய நிர்வாகிங்க அனைவரும் சைலென்ட் மோடுக்கு போய்ட்டாங்க. காரணம் எல்லாரும் தாமரைக்கு விலை போய்ட்டாங்கன்னு பேச்சு அடிபட்டுச்சு. இதனால, இல கட்சிக்கு இந்த முறை வாக்குகள் பெரும் சரிவு ஏற்படும்னு சொல்றாங்க.

இதற்கிடையில் இலக்கட்சி வேட்பாளர் மற்றும் முக்கிய நிர்வாகிகளோட, ஆன்மிக சுற்றுலா போயிருக்காங்க. போன இடத்துல வெற்றி பெற வேண்டி சிறப்பு பரிகாரமும், பூஜைகளையும் நடத்தினாங்களாம். இந்த போட்டோக்கள் எல்லாம் சோஷியல் மீடியாவுல வெளிய வந்திருக்குது. இதைபார்த்து, ஓட்டு கேட்கவே பல இடங்களுக்கு வரல. ஆனா, அவர் எப்படி ஜெயிக்க முடியும்னு இல கட்சிக்காரங்களே புலம்பி வர்றாங்களாம். முக்கிய நிர்வாகிங்க யாரும் தேர்தல்ல வேலை பார்க்காம, இப்ப கோயில் கோயிலாக போய் பரிகாரம் செஞ்சா?

எப்படி வெற்றி கிடைக்கும், எல்லாம் தங்களோட பதவியை காப்பாத்த, இப்படி நாடகம் நடத்துறாங்களேன்னு ரத்தங்களே தலையில அடிச்சிக்குறாங்க. இலையோட நிலைமை இப்படியாகிடுச்சேன்னு ஜனங்களும் உச்சுக்கொட்டி பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மீனவ சங்கங்களின் கொதிப்புக்கு என்ன காரணமாம்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘நாகர்கோவிலில் உள்ள மீன்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில், உள் நாட்டு மீனவர்களுக்கான மீன் ஆய்வாளர் பணியிடம் சமீபத்தில் புதிதாக உருவாக்கப்பட்டது.

இந்த பணியிடத்துக்கு பெண் பணியாளர் ஒருவரை நியமிச்சு இருந்தார்கள். நாகர்கோவிலில் உள்ள துணை இயக்குனர் ஆபீசுக்கு வந்து அந்த பெண் பணியாளரும் பொறுப்பேற்றார். மறுநாளே அவர் விடுப்பில் சென்று விட்டார். தற்போது 5 மாதங்களுக்கு மேல் இந்த பணியிடம் காலியாக உள்ளது. இதனால், உள் நாட்டு மீனவர்கள் தங்களுக்கான கோரிக்கை மனுக்களை கொடுக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள்.

இது தொடர்பாக மீன்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைச்சும், வேறொரு மீன் ஆய்வாளரை நியமிக்க நடவடிக்கை இல்லையாம். விடுமுறையில் செல்ல இருந்த பெண் பணியாளருக்கு வலுக்கட்டாயமாக, புதிதாக உருவாக்கப்பட்ட பணியிடத்துக்கு போஸ்டிங் கொடுத்து பொறுப்பேற்க வைத்து விட்டு விடுமுறையில் செல்ல வைத்துள்ளனர். அதிகாரிகள் செய்த குளறுபடி தான் இதற்கு காரணமாம். தற்போது ஜூன் 4ம் தேதிக்கு பின், இதை மையமாக வைச்சு போராட்டம் நடத்த மீனவ சங்கங்கள் தயாராகி வருகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

 

You may also like

Leave a Comment

3 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi