சென்னை: கல்வி மற்றும் பேரிடர் நிதியை தொடர்ந்து தமிழ் மொழி நிதியிலும் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டியுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2014-2015 மற்றும் 2024-25க்கு இடையில் சமஸ்கிருத மொழியை மேம்படுத்துவதற்காக ஒன்றிய அரசு பெரும் நிதியை செலவிட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.ஐ.) தெரிய வந்துள்ளது. சமஸ்கிருதத்தை மேம்படுத்துவதற்காக ஒன்றிய அரசு மொத்தம் ரூ.2532.59 கோடியை செலவிட்டுள்ளது.
இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா உள்ளிட்ட ஐந்து பாரம்பரிய மொழிகளை விட 17 சதவீதம் அதிகமாகும். சமஸ்கிருத மேம்பாட்டிற்காக ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ரூ.230.24 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மற்ற ஐந்து மொழிகளுக்கும் சேர்த்து ரூ.13.41 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருத மொழிக்கு வழங்கப்பட்ட மொத்த நிதியில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவாகவே தமிழகம் பெற்றது.
ஒன்றிய அரசின் இந்த செயல்பாட்டால் சமஸ்கிருதம் தமிழை விட 22 மடங்கு அதிக நிதியை பெறுகிறது. சமஸ்கிருதத்தின் மொத்த நிதியில் ஒடியா 0.5 சதவீதத்தையும், மலையாளம் 0.2 சதவீதத்தையும் பெற்றன. முன்னதாக 2004ம் ஆண்டில் தமிழ் செம்மொழி அந்தஸ்தைப் பெற்றது மற்றும் இந்திய மொழிகளை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.113.48 கோடியை பெற்றது.
சமஸ்கிருதத்திற்கு வழங்கப்பட்ட தொகை தமிழுக்கு ஒதுக்கப்பட்டதை விட 22 மடங்கு அதிகம். தமிழை தொடர்ந்து 2005ம் ஆண்டில் தான் சமஸ்கிருதத்திற்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது எனபது குறிப்பிடத்தக்கது. இந்தி, உருது மற்றும் சிந்தி மொழிகள் எதுவும் செம்மொழி இல்லை என்றாலும், சமஸ்கிருதத்தை விட குறைவான நிதியைப் பெற்றன.
* போலிப் பாசம் தமிழுக்கு; பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு முதல்வர் கண்டனம்
ஒன்றிய பாஜ அரசு கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருதத்தை மேம்படுத்துவதற்காக ரூ.2,533.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது தமிழ் உள்ளிட்ட 5 மாநில மொழிகளுக்கு ரூ.147.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதைவிட பல மடங்கு அதிகம். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: போலிப் பாசம் தமிழுக்கு; பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.