“ஞானானந்தமயம் தேவரம் நிர்மல ஸ்படி காக்ரிதிம்
ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவ முபாஸ் மஹே!!’’
ஞானமும், ஆனந்தமும் தன்மயமாகக் கொண்ட, பழுதின்றி தூய்மையான வெண்மைத் திருமேனியராய் அறிவுதரும் சூரிய ஒளியினும் மிக்க தேஜஸ்மிகுந்தவராக ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவரை, நம்ம முன்னோர்கள் போற்றினர். வித்யா மூர்த்தி என்று ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகமத்துள் பல சம்ஹிதைகளும், முதலாவதாகப் போற்றுகின்றன. ‘‘பரிமுகமாயருளும் பரமன்’’ என்று, ‘‘மயர்வற மதிநலம் அருள்பவன்’’ என்றும் ஞானப்பிரானாக ஆழ்வார்கள் போற்றுகின்றனர். சுவாமி தேசிகன், வாதிராஜஸ்வாமி ஆகிய பல அருளாளர்கள் கையில் கனியென்ன, ஹயக்ரீவரைக் காட்டித் தந்தார்கள். வேதங்களின் ரூபமாகவே போற்றப்பெறும் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவரை, முனிபுங்கவர்கள், தியானத்தாலும், யாகத்தினாலும், அர்ச்சித்தலாலும் உபாசனை செய்து, கார்ய சித்தி பெற்றனர். வெள்ளைப் பரிமுக தேசிகரை, ஸ்ரீ மத் ராமானுஜர் வகுந்த ஆசார்ய பீடங்களும், ஸ்ரீ மடங்களும் ஆராத்ய தெய்வமாகப் போற்றுகின்றனர்.
‘‘வாங்மயம் நிகிலம் யஸ்ய வஸ்துஜாதமனஸ்வரம்
வரவாஜி முகம் த்யாயேத்
அத வாகீஸ்வரம் விபும்’’
என்று சாத்வத ஸம்ஹிதை விளம்புகிறது.
இன்னும் சூர்யகாந்தம் போல், ஒளிமிக்க ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர், அனேக புஜ பூஷிதராய் விளங்குகிறார். ஆம்! பல்வேறு திருக்கரங்களைக் கொண்டவராய், அவைகளில் சங்கு, சக்கரம் மட்டுமின்றி கமலம், பூர்ணகும்பம், யாக திரவியங்கள், ஆச்ரம உபகரணங்கள் (கல்விச் சாலைக்கு வேண்டிய, பயிற்சிக் கருவிகள்) புத்தகம், ஓலைச்சுவடி ஆணி, எழுதுகோல், அறிவுதரும் (ஓஷதிகள்) மூலிகைகள் முதலான பல வித்தியாசமானபொருட்களை கரங்களில் ஏந்தி, வேத, வேதாந்த, உபவேத, சம்ஸ்காரங்களை ஓதுவிக்கும் ஒப்பற்ற மூர்த்தியாக விளங்குகிறார் என்கிறது “ஸ்ரீ பாஞ்சராத்ர ஸாத்வத ஸம்ஹிதை’’. எழுத்துக்களின் வடிவாய் அவை சேர்ந்த சொற்களாய், அவை சேர்ந்த பத்தியாய், அவை சேர்ந்த அரிய கட்டுரையாய், அதனை நம் சிந்தனையில் தெளிவாகத் தேக்கித் தரும் ஞானமூர்த்தி வாகீசரான ஸ்ரீ ஹயக்ரீவர் என்றெல்லாம் போற்றுகிறது “ஸ்ரீ ஹயக்ரீவ ஸஹஸ்ரநாமம்’’.அறிவு தரும் ஸ்ரீ ஹயக்ரீவர், அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இங்கே எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இத்திருக்கோயிலின் அமைவிடம் பல நூற்றாண்டுகளுக்குமுன் அனந்தாழ்வாராகிய நாகங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடம்.திருவயிந்தை (திருவகீந்திரபுரம் கடலூர்) நகரில் விழுந்த, கருடன் கொணர்ந்த அமுதச் சிதறல் இங்கும் துளியாய் வீழ்ந்ததுவாம். திருவயிந்தை நகரில் சரிந்த அனுமன் சஞ்சீவி பர்வதத்தின் ஒரு பகுதி இங்கும் சரிந்ததுவாம்.
நாட்டிலேயே முதன்முதலாக, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் தனிக்கோயில் கொண்டருளிய இடம். ஆண்டு முழுவதும் வேதமும், வேள்வியும், விழாவும் நிறைந்த இத்திருக்கோயிலில் பொன்மயமான கருவறையில் மூலவரும், காண்பதற்கரிய தர்மாதி பீடத்தில் உற்சவரும் எழுந்தருளி, நன்மைகள் பலபுரிந்து, அறிவுதரும் அற்புதத் திருமேனியராய் காட்சி தருகின்றனர். பரிமுகன் மட்டுமின்றி, அரிமுகன் என்னும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஏகாதச மூர்த்திகளாய், அஹோபிலமாய் காட்சி தரும் உயர்இடம். ஆச்சார்ய மஹனீயர்களும், அருளாளர்களும் உவந்து மங்களாசாசனம் செய்த, செய்கின்ற திவ்ய திருத்தலம். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற உள்ள பொதுத் தேர்வை முன்னிட்டு, அனைத்து மாணவ மாணவியரின் கல்வி வளம் சிறக்க, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவ பெருமாளுக்கு “ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவ ஸஹஸ்ரநாம அர்ச்சனை’’ பொதுத்தேர்வு நாட்களில் காலை 10.30 மணிக்கு மாணவ மாணவியர் பெயர், நட்சத்திரம் ராசி ஆகியவற்றை சங்கல்பம் செய்து நடைபெற உள்ளது. இந்த ஸஹஸ்ரநாம அர்ச்சனையில் கலந்துகொள்வதால் மாணவ, மாணவிகள் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதுடன் தாங்கள் மேல்படிப்பில் படிக்க விரும்பும் மருத்துவம், பொறியியல், கணக்காயர் (C.A,) ஆகிய துறைகளில் சிறந்து படித்திடுவர். ஆலயம் இருப்பிடம்: ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் திருக்கோயில், ராமகிருஷ்ணா நகர், முத்தியால்பேட்டை, பாண்டிச்சேரி- 3. மேலும் தொடர்புக்கு: 9994460420.
தர்மாதி பீடம் பற்றிய சிறப்புக்கள்
“கூர்மாதீந் திவ்யலோகம் ததநு மணிமயம் மண்டபம் தத்ரசேஷம்
தஸ்மின் தர்மாதி பீடம் ததுபரி கமலம் சாமரக்ராஹிணீஸ்ச
விஷ்ணும் தேவீர் விபூஷாயுத கணமுரகம் பாதுகே வைநதேயம்
ஸேநேசம் த்வாரபாலாந் குமுத முககணாந் விஷ்ணு பக்தாந் ப்ரபத்யே!’’
இந்த ஸ்லோகம் ஸ்ரீ வைஷ்ணவர்கள் அனைவரும் திருவாராதனத்தின் போது (பொதுவாகவும்) அனுசந்திக்க வேண்டிய முக்கியமான ஸ்லோகம். இதன் மூலமாக எம்பெருமான் பரமபதத்தில் எத்தகைய திருமாமண்டபத்தில் எழுந்தருளியிருக்கிறான் என்பதனையும் ‘‘தர்மாதி’’ என்று போற்றத்தகும் பொன்மயமான பீடத்தின் அருகில் எப்படிப்பட்ட காட்சியைக் காணமுடிகிறது என்பதனையும் மிகச் சுருக்கமாக அறிவிக்கிறது. இதனை ‘‘யோக பீடம்’’ என்றும், அப்பீடத்தின் அருகேயும், படிப்படியாகவும் க்ரமமாக எழுந்தருளியுள்ள நித்யஸூரிகள், திக்பாலகர்கள், கைங்கர்யம் செய்து கொண்டும், அஞ்சலித்துக் கொண்டுமிருப்பதை ஸ்ரீ பாஞ்சராத்ரம் மிக அழகாக எடுத்துரைக்கின்றது.ஸ்ரீ பாஷ்யகாரர் தம்முடைய ‘‘நித்யக்ரந்தம்’’ என்னும் நூலை கடைசியாக அருளிச் செய்தார். இந்த நூலில் பகவதாராதனம் முக்கியமாக எடுத்துரைக்கப்படுகின்றது. அதனுள்ளும் இந்த தர்மாதி யோகபீடம் அழகாகக் காட்டப்படுகின்றது.இதனையெல்லாம் நினைவில் கொண்டு, அதனுள் காட்டியபடி முழுவதுமாகக் காட்டமுயன்று, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவனுடைய கடாட்சத்தால் பூர்த்தியடைந்து இருக்கின்றது.
இத்தர்மாதி பீடத்தில் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவனை எழுந்தருளச் செய்து சேவிக்கும், ஒவ்வொரு அடியவரும் திருவாராதனத்தில் (பூஜையில்) முறையாக எப்படி ஆராதிக்கவேண்டும் என்பதனையும், அதன் பலனையும், உடனே அடைந்து விடுவார்கள்.பிரபஞ்ச-இவ்வுலகில் இயங்குகின்ற அனைத்து இயக்கங்களுக்கும் ஆதாரமாக இருக்கின்ற எம்பெருமானை ஸ்ரீ பூமாதேவி முதலாக ஸூர்ய மண்டலத்தையும் தாண்டி பரமபதத்தில், நாகபோகத்தில் வீற்றிருக்கும் வரை ஒவ்வொரு ஆவரணத்திலும் உள்ள அஷ்டதிக் பாலகர்கள், அஷ்டதிக் தேவதைகள், அஷ்ட வசுக்கள், நவகிரஹங்கள், நால்வேதங்களின் மூர்த்திகள், நால் குணங்கள், மும்மூர்த்திகள், அனந்த கருட விஷ்வக்ஸேனாதி, துவார பாலகர்கள், ஆழ்வாராசார்யர்கள் என்று அனைத்து (பகவத் பாரிஷதர்களாகிய) கைங்கர்ய பரர்களால் சேவிக்கப்படும் எம்பெருமானை, அவர்களோடு ஒருசேர சேவிக்கும் பாக்யம் நமக்குக் கிடைக்கின்றது.இந்த தரிசனத்தால் எத்தகைய பலன்கள் கிடைக்கப்பெறும் என்பதை சொல்லத் தேவையில்லை. நமக்கு உள்ளத்தால், உடலால், பிறப்பால், செயலால் எத்தகைய தோஷங்கள் உள்ளதோ அவையனைத்தும் உடனே விலகிடும், ஞானமும் செல்வமும் வந்தெய்தும்.