*அய்யம்பாளையம் ஆசிரியர்கள் அசத்தல் அறிவிப்புடன் விழிப்புணர்வு
பட்டிவீரன்பட்டி : அரசு பள்ளியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.5000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என அய்யம்பாளையம் பள்ளி ஆசிரியர்கள் அறிவிப்பு செய்து விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின் 1ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வியில் சேர சிறப்பு இட ஒதுக்கீடு, மாணவிகளுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மதிய உணவுடன் 14க்கும் மேற்பட்ட வகைகளில் விலையில்லா பொருட்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட பள்ளிகளில் காலை சிற்றுண்டி உணவு திட்டம் அமலில் உள்ளது.
இதுதவிர அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு மேம்பாடு, குடிநீர்- கழிப்பறை வசதிகள், புதிய கட்டிடங்கள், சுற்றுச்சுவர், வண்ணக்கல் பதித்தல், விளையாட்டு மைதானம் மேம்படுத்துதல், புதிய கற்பித்தல் அணுகுமுறைகள், மின்னணு சாதனங்களுடன் கற்பித்தல், நவீன ஆய்வகம். பல்வேறு போட்டிகள் நடத்துதல், வெளிநாடு சுற்றுலா, கலை திருவிழா ஆகியவற்றின் காரணமாக அரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.
தற்போது அரசு பள்ளிகளில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையம் சந்தைப்பேட்டை பகுதியிலுள்ள ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை பேரூராட்சி கவுன்சிலர் சுரேஷ் துவக்கி வைத்தார்.
அரசு பள்ளியில் சேர வலியுறுத்தும் விழிப்புணர்வு பாடலுடன் கலை குழுவினர் மற்றும் ஆசிரியர்கள் அய்யம்பாளையம் டவுன் பகுதிகளில் வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கினர். இந்த துண்டு பிரசுரத்தில், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை இப்பள்ளியில் சேரும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் சொந்த பணத்தில் ஒவ்வொருவருக்கும் கல்வி உதவித்தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.
பேரணியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், கல்வி ஆர்வலர்கள், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள், மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியை மேரி குணசுந்தரி, உதவி ஆசிரியர் ராமு ஆகியோர் செய்திருந்தனர்.