சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கென சமக்ர சிக்ஷயா அபியான் திட்டத்திற்கு ரூ.3586 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. நடப்பாண்டில் முதல் தவணையை ஜூன் மாதத்தில் விடுவித்திருக்க வேண்டும். அப்படி விடுவிக்காத நிலையில் ஒன்றிய அரசுக்கு மாநில அரசால் பலமுறை கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன. நிதி தரப்படாததால் மாநில கல்வித்துறை கடும் பொருளாதார மற்றும் நிர்வாக நெருக்கடியில் சிக்கியிருக்கிறது.
புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற ஒரே காரணத்திற்காக தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு வருகிறது. இதை தமிழ்நாடு காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. பி.எம். திட்டத்தின் மூலம் இந்தியை திணிக்கும் முயற்சியை ஒன்றிய அரசு மேற்கொள்கிறது. இதனை தமிழ்நாடு அரசு எதிர்ப்பதோடு, புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளாது என்று அறிவித்திருக்கிறது. சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையை மாநில அரசுக்கு ஒதுக்காமல் இருப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதாகும் என கூறியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி:
ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய ரூ.573 கோடியை ஒன்றிய அரசு இன்று வரை வழங்கவில்லை. பி.எம். பள்ளிகள் திட்டத்தை நிபந்தனைகளுடன் செயல்படுத்த மறுத்ததற்காக தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை மறுப்பது நியாயமற்றது. புதிய கல்விக் கொள்கையையும், பி.எம். பள்ளிகளையும் காரணம் காட்டி நிதியை மறுப்பது அநீதியாகும். இப்படி ஒரு நெருக்கடியை ஒன்றிய அரசு ஏற்படுத்தக் கூடாது என கூறியுள்ளார்.