*ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ வழங்கினார்
சாத்தான்குளம் : சாத்தான்குளத்தில் நடந்த கல்வி திருவிழாவில் ஸ்ரீவை. தொகுதியை சேர்ந்த 25 மாணவர்களுக்கு இலவச பொறியியல் கல்விக்கான ஆணையை ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ வழங்கினார்.
ஸ்ரீவைகுண்டம் முன்னாள் எம்எல்ஏ ஊர்வசி செல்வராஜ், கடந்த 2006ம் ஆண்டு தொகுதி எம்எல்ஏவாக தேர்வானதும் தொகுதியை சேர்ந்த 10 ஏழை மாணவர்களை தேர்வு செய்து சென்னையில் உள்ள கிங்ஸ் பொறியியல் கல்லூரியில் இலவச பொறியியல் படிப்பு படிக்க ஏற்பாடு செய்தார்.
இதையடுத்து சாத்தான்குளம் தொகுதி, ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் இணைக்கப்பட்ட நிலையில், ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ தேர்தல் வாக்குறுதியாக தந்தையின் வழியில் 25 ஏழை மாணவர்கள் தேர்வு செய்து சென்னை கிங்ஸ் பொறியியல் கல்லூரியில் இலவசமாக படிக்க வைப்பதாக தெரிவித்திருந்தார்.
அதன்படி ஆண்டுதோறும் 25 மாணவர்களை தேர்வு செய்து கிங்ஸ் பொறியியல் கல்லூரியில் படிக்க வைத்து வருகிறார். அதேபோல் ஏழை மாணவர்கள் எளிதில் கல்வி கற்கும் வகையில் இலவசமாக ஊர்வசி அகாடமியை சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், ஏரலில் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நடப்பாண்டு சென்னை கிங்ஸ் பொறியியல் கல்லூரியில் இலவசமாக கல்வி பயில தொகுதியைச் சேர்ந்த 25 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களுக்கு பொறியியல் படிப்பு படிப்பதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி, சாத்தான்குளம் ஊர்வசி அகாடமியில் கல்வி திருவிழாவாக நடந்தது. ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ தலைமை வகித்து தேர்வு பெற்ற 25 மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரியில் இலவசமாக கல்வி பயில்வதற்கான ஆணையை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், கடந்த 2006ம் ஆண்டு முதல் எனது தந்தை ஊர்வசி செல்வராஜ் வழியில் இலவச பொறியியல் கல்வி பயில நடவடிக்கை எடுத்து வருகிறேன். எனது தேர்தல் வாக்குறுதிப்படி நடப்பாண்டில் தேர்வு பெற்ற 25 மாணவர்களுக்கு இலவச கல்விக்கான ஆணையை வழங்கினேன்.
ஊர்வசி அகாடமி மூலம் பயிற்சி பெற்ற மாணவர்களில் பலர் காவல் துறை, ரயில்வேஉள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். மாணவர்கள் எந்த சிரமத்தையும் பொருட்படுத்தாமல் நன்கு படித்து முன்னேற வேண்டும் என வாழ்த்துகிறேன், என்றார்.
விழாவில் மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் சங்கர், மாவட்ட மீனவரணி தலைவர் சுரேஷ், வட்டார தலைவர்கள் பார்த்தசாரதி, சக்திவேல்முருகன், பிரபு, கோதாண்டராமன், ஜெயசீலன், பூங்கன், ரமேஷ்பிரபு, ஜெயராஜ், நகர தலைவர் வழக்கறிஞர் வேணுகோபால், மாவட்ட பொருளாளர் எடிசன், மாவட்ட பொதுச் செயலாளர் பிச்சிவிளை சுதாகர், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜோசப் அலெக்ஸ், லிங்கபாண்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராஜ், நெல்லை மாவட்ட காங். துணை தலைவர் நம்பித்துரை, தொகுதி விசிக பொறுப்பாளர் திருவள்ளுவன், ஒன்றிய விசிக செயலாளர்கள் ஜெயராமன், செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.