சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இன்ஜினியரிங் கல்லூரிகள் மற்றும் தொலைதூர கல்வி நிறுவனத்தின் கீழ் படித்து அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பாக மீண்டும் சிறப்பு அரியர் தேர்வு நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக விதிகள் படி, ஒருவர் டிகிரி முடித்த 3 ஆண்டுக்குள் அரியர் தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இல்லையெனில், பெற்ற டிகிரி ரத்து செய்யப்படும்.
இப்படி, அரியர் எழுதாமல் டிகிரியை இழந்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்துக் கொண்டு மீண்டும் தேர்வெழுதி டிகிரியை பெறலாம். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு படித்தவர்கள் கூட இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு டிகிரி பெறமுடியும். அதன்படி, 2024 நவம்பர்/டிசம்பர் மாதங்களிலும், 2025 ஏப்ரல்/மே மாதங்களிலும் சிறப்பு அரியர் தேர்வுகள் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
நவம்பர்/டிசம்பர் மாத சிறப்பு அரியர் தேர்வுக்கு மாணவர்கள் வருகிற 30ம் தேதி முதல் செப்டம்பர் 18ம் தேதி வரை https://coe1.annauniv.edu என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். சிறப்பு தேர்வு கட்டணமாக ரூ.5 ஆயிரமும் வசூலிக்கப்படும். இத்தேர்விற்கு சென்னை, விழுப்புரம், ஆரணி, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் ஆகிய மாவட்டத்தில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.