சிவகங்கை: எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து, செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவித்து சிவகங்கை மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் பெயரில் நடந்த பாராட்டு விழாவில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டன. எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிருப்தி தெரிவித்து, அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். செங்கோட்டையன் மட்டுமின்றி முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவும் தன்னை புறக்கணிப்பதாக அதிருப்தி தெரிவித்தார். இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் செங்கோட்டையனுக்கு ஆதரவாகவும் எடப்பாடி பழனிசாமியை கண்டித்தும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
எம்ஜிஆர், அம்மா அவர்களின் உண்மை விசுவாசிகள் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில், ‘‘எம்ஜிஆர், அம்மா புகழை மறைத்து, தன்னை மட்டும் முன்னிலைப்படுத்த முயன்று வரும் எடப்பாடி பழனிசாமியின், எண்ணத்தை சுட்டிக்காட்டி தன்னுடைய உரிமைக்குரலை வெளிப்படுத்திய செங்கோட்டையனை, தொண்டர்களின் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்தியதற்காக கழக தொண்டர்கள் சார்பாக வரவேற்கிறோம்’’ என கூறப்பட்டுள்ளது.
எடப்பாடிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அவ்வப்போது போஸ்டர் ஒட்டுவது வழக்கம், ஆனால் முதல்முறையாக அதிமுகவில் உள்ள செங்கோட்டையனுக்கு ஆதரவாகவும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.