சென்னை: திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி சென்னை அண்ணா அறிவாலயத்தில் அளித்த ேபட்டி: தமிழ்நாட்டுடைய மண், மானம், மொழி காக்கும் போராட்டத்தில் தமிழர்களாகிய நாம் ஓரணியில் திரள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருக்கிறார். அதிகாரத்தை பயன்படுத்தி தமிழர் மண், மொழி, சுயமரியாதை, அதிகாரம் மீது சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிராக முதல்வர் அறை கூவல் விடுத்துள்ளார்.
மும்மொழிக் கொள்கை என்ற ஏமாற்றுக் கொள்கையை தமிழ்நாட்டிற்கு திணிக்க நினைத்தபொழுது, தமிழ் செம்மொழிக்கு குறைவான நிதி ஒதுக்கி சிறுமைப்படுத்தும் பொழுது, மக்களை மதவாதத்தின் அடிப்படையில் பிளவுபடுத்த நினைக்கும் பொழுது, தமிழர்கள் அனைவரும் சாதி, மதம், ஊர், நிலம், கட்சிகள் என அனைத்தும் கடந்து ஓரணியில் நிற்க வேண்டியுள்ளது. பெரியார், அண்ணா, கலைஞர், தலைவர் மு.க.ஸ்டாலின் வழியில் திமுக தொண்டர்கள் ஒவ்வொரு வீடு வீடாக சென்று ஜூலை ஒன்றாம் தேதி முதல் தொடங்க உள்ளது. குறிப்பாக எதிர்க்கட்சியினரும் சேர வேண்டும். தமிழர்கள் நாம் ஓரணியில் திரள வேண்டிய அவசியம் இருக்கிறது.
ஜாதி மதங்களை கடந்து ஓரணியில் திரள்வோம். கோவில்களில் வெட்டப்படும் கிடாவை போல் தன்னை அழிக்க பாஜக வருகிறது என்று பொருள் புரியாமல் எடப்பாடி போன்றவர்கள் உள்ளார்கள். எடப்பாடியை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டு முதல்வரை நாங்கள் தேர்ந்தெடுப்போம் என்று அமித்ஷா சொல்கிறார். மவுனமாக தன் கட்சியில் உள்ள அண்ணாவின் படத்தை கழட்ட தயாராகி விட்டார் எடப்பாடி பழனிசாமி. ஒரு மக்கள் உறுப்பினராக கூட தேர்ந்தெடுக்கப்படாத ஒரு அமைப்பை சேர்ந்தவர்கள் ஆட்சி பொறுப்பை பற்றி பேசுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.