சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆகஸ்ட் 4ந்தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, கட்சி வளர்ச்சி பணியில் ஈடுபட நிர்வாகிகளுக்கு தொடர்ந்து உத்தரவிட்டு வருகிறார். அதிமுகவில் கட்சி உறுப்பினர்களை சேர்க்க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் எடப்பாடி வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில், எடப்பாடிக்கு எதிராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன் திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு அதிக ஆதரவு அளித்து வரும் கொங்கு மண்டலத்தில் ஓ.பன்னீர்செல்வம் விரைவில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார். இதையடுத்து, ஓபிஎஸ் ஆதரவு மாவட்டமான மதுரையில் அதிமுக மாநில மாநாடு ஆகஸ்டு 20ம்தேதி நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த மாநாட்டுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட செயலாளர்களும் திரளான தொண்டர்களை அழைத்து வர உத்தரவிடப்பட்டுள்ளதுடன், மாநாடு குறித்து ஆலோசனை நடத்த ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனி நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மதுரையில் ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெறும் மாநாடு குறித்து ஆலோசனை நடத்த, வருகிற ஆகஸ்ட் 4ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.