சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை நேரில் வந்து, அவரது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று தரவேண்டும். அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது. அரசியல் தலைவர்கள், பெண்கள், பொதுமக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லை. சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். எனவே உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
இப்படிப்பட்ட படுகொலையை சாதாரண ஆட்கள் செய்திருக்க முடியாது. ஆம்ஸ்ட்ராங்குக்கு முன் விரோதிகள் இல்லை என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இந்த வழக்கு நடுநிலையோடு நடைபெற வேண்டுமென்றால் சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.