சென்னை: பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நேற்று அதிமுக அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சசிகலா, ஓபிஎஸ் குறித்து பேச கட்சி தலைமை திடீர் தடை விதித்ததால் மாவட்ட நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது. நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து தொகுதி வாரியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை மாதம் 15 நாட்கள் நிர்வாகிகளுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் அந்தந்த தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் உள்ளிட்டவர்கள் மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பலரும், ‘கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும்’ என்ற கருத்தை பதிவு செய்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர், “சசிகலா, ஓபிஎஸ், டி.டி.வி.தினகரனை மீண்டும் அதிமுக கட்சியில் இணைக்க வாய்ப்பே இல்லை’ என்று உறுதியாக கூறிவிட்டார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக அவசர செயற்குழு கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்மகன் உசேன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் தொடங்கியது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அனைத்து செயற்குழு உறுப்பினர்களுக்கும் ஒரு உத்தரவு பிறப்பித்ததாக கூறப்படுகிறது.
அதன்படி, “செயற்குழு கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் யாரும் சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓபிஎஸ் ஆகிய மூன்று பேரையும் மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று பேசக்கூடாது” என்று உத்தரவிட்டார். இதனால் அதிமுக நிர்வாகிகள் அதிருப்தி அடைந்தனர். ஆனாலும் அதிமுக செயற்குழு கூட்டத்தில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 40 இடங்களிலும் படுதோல்வி அடைந்தது குறித்து நிர்வாகிகள் காரசாரமாக விவாதித்தனர். மேலும், சிலர் கட்சி தலைமையின் உத்தரவையும் மீறி கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைத்து வருகின்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அதேபோன்று, கொங்கு மண்டலம் மற்றும் தென்மாவட்டங்களை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் பேசும்போது, “கட்சி தலைமையின் தவறான முடிவால் தொடர்ந்து நடைபெறும் தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்து வருகிறது. கட்சி மற்றும் தொண்டர்களின் நலன் கருதி வருகின்ற தேர்தல்களில் நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும். கூட்டணியை பலப்படுத்த வேண்டும். கட்சி தலைமை, தன்னை மட்டுமே முன்னிறுத்தி வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று எச்சரிக்கும் தொணியில் பேசியதால் நேற்று நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
* ஒன்றிய அரசை கண்டித்து தீர்மானம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று சென்னையில் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு ஒன்றிய அரசு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டும் காணாமல் இருந்து வரும் ஒன்றிய அரசை வன்மையாக கண்டிக்கிறோம். ஒன்றிய பட்ஜெட்டில், தமிழ்நாட்டிற்கு எந்தவிதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
விவசாயிகளுக்கான சில அறிவிப்புகள், இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு முயற்சி, சிறு,குறு தொழில்களுக்கு கடன் வழங்குதல் போன்ற அறிவிப்புகள் வரவேற்கக் கூடியதாக இருந்தாலும், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம், அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு தளவாட தொழில் வழி திட்டம், நடந்தாய் வாழி காவேரி திட்டம், வெள்ளத் தடுப்பு போன்ற திட்டங்களுக்கு நிதி அறிவிக்கப்படாததில் இருந்து தமிழ்நாடு முழுமையாக புறக்கணிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. ஒன்றிய அரசின் இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.