சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று 2வது நாளாக ஆலோசனை நடத்தினார்.
தமிழக பாஜ சார்பில் மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில், பெரியார், அண்ணாவை இழிவாக விமர்சித்து ஒரு வீடியோ ஒளிபரப்பப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி இதுவரை பாஜவுக்கு பதில் அளிக்கவில்லை. இது அதிமுக கட்சி தொண்டர்களிடம் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் சிவகங்கை, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை, புதுக்கோட்டை, ஈரோடு ஆகிய மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து நேற்று 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர், திருப்பத்தூர், வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சி பணிகள், 2026 சட்டமன்ற தேர்தலில் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி, பூத் கமிட்டி அமைப்பது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் எடப்பாடி பேசும்போது, “மாவட்ட செயலாளர்கள் கட்சியின் கீழ் மாவட்ட தலைவர்களிடம் இணக்கமாக செயல்பட வேண்டும். மாவட்ட செயலாளர்கள் பற்றி புகார் வந்தால், அவர்களின் பதவிகளை பறிக்கவும் கட்சி தலைமை தயங்காது. வருகிற தேர்தலில் கூட்டணி குறித்து கட்சி தலைமை இறுதி முடிவு எடுக்கும். ஜூலை மாதம் இறுதியில் இருந்து மாவட்ட வாரியாக நேரில் வந்து ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளேன்” என்றார்.