சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று மாலை 5 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி வரவேற்றார். எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றினார். எஸ்.பி.வேலுமணி நன்றி கூறினார். நாடாளுமன்ற தேர்தல், கூட்டணி குறித்துஆலோசனை நடத்தப்பட்டது. கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. உறுப்பினர் சேர்க்கை குறித்து பல முறை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி கூறியும் உறுப்பினராக சேர யாரும் ஆர்வம் காட்டவில்லை. இதனால் மாவட்ட செயலாளர்கள் சோர்ந்து போயுள்ளனர். இது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேலும், எம்பி தேர்தலில் போட்டியிடுவதற்காக 40 தொகுதிகளுக்கும் உத்தேச வேட்பாளர் பட்டியல் தயாரிப்பதற்காக மாவட்ட செயலாளர்களிடம் பணம் உள்ள வேட்பாளர்களை தேர்வு செய்து தரும்படி எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டார். இதுவரை 5 தொகுதிகளுக்கு மட்டுமே ஆட்கள் தயாராகியுள்ளனர். 35 தொகுதிகளுக்கு ஆட்களே கிடைக்கவில்லை. குறிப்பாக சென்னைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி கடும் அதிருப்தியில் உள்ளார். அதேநேரத்தில், அதிமுக – பாஜ கூட்டணி முறிந்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறி வருகிறார்.
ஆனாலும், கட்சியின் முன்னணியினரின் நடவடிக்கையில் தெளிவாக முடிவு இல்லாததால் தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக ெபாதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் உள்பட பொறுப்பாளர்கள் யாரையும் பேச அனுமதிக்கவில்லை. இதனால், மாவட்ட செயலாளர்கள் மீதுள்ள குறைகளை எங்களால் கட்சி தலைமையிடம் எடுத்துக்கூற முடியவில்லை. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ‘‘பூத் கமிட்டி அமைக்கும் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, அரியலூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் பூத் கமிட்டி பணிகள் பாதி கூட நடக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. இதனால், 2 முறை கூட்டம் போட்டு கூறினேன்.
இன்னும் அந்தப் பணிகளை முடிக்கவில்லை. இதனால் கடைசி வாய்ப்பாக டிசம்பர் மாதம் 4ம் தேதிக்குள் இந்த பணிகளை முடிக்க வேண்டும். 68 ஆயிரம் பூத் கமிட்டிக்கும் தேர்வு செய்யப்படுகிறவர்களின் பெயர், முகவரி, செல்போன் எண், ஆதார் கார்டு ஆகிய தகவல்களை சேகரித்திருக்க வேண்டும். ஜனவரியில் நாம் தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும். பொங்கல் பண்டிகைக்குப் பின்னர் மண்டல மாநாடு நடத்தப்படும். அதோடு, மண்டல அளவில் பூத் கமிட்டியினரின் கூட்டம் நடைபெறும். தற்போது கூட்டணி குறித்து நாம் தெளிவான முடிவு எடுத்துள்ளோம். தேர்தல் பணிகளில் சுணக்கம் உள்ளது. பணிகளை நீங்கள் தீவிரப்படுத்துங்கள். வெற்றிக்கான வழிகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று பேசியதாக தெரிவித்தார்.