வாழப்பாடி: வாழப்பாடி அருகே முத்துமலை முருகன் கோயிலில், எடப்பாடி பழனிசாமி நேற்று சிறப்பு வழிபாடு செய்தார். அப்போது, அவர் லிப்டில் இருந்தபடி சிறிது நேரம் தியானம் செய்தார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று காலை சேலம் மாவட்டம், வாழப்பாடி வந்தார். பின்னர், ஏத்தாப்பூரில் உள்ள முத்துமலை முருகன் கோயிலுக்கு சென்றார். அங்குள்ள விநாயகர் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, 146 அடி உயர முருகன் சிலைக்கு பாத பூஜை செய்தார். இதையடுத்து, கருவறையில் வழிபாடு நடத்தினார். பின்னர், லிப்ட் மூலம் மேலே சென்று, முருகனின் வேலுக்கு பால் அபிஷேகம் செய்தார். பின்னர், சிலையின் மைய பகுதிக்கு வந்து, லிப்டில் இருந்தவாறு சுமார் 15 நிமிடம் தியானம் செய்தார்.
தியானத்தை முடித்து கீழே இறங்கி வந்ததும், பக்தர்களுக்கு பொங்கல் வழங்கினார். மேலும், அன்னதானம் வழங்கும் கூடத்திற்கு சென்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். எம்எல்ஏக்கள் ஆத்தூர் ஜெய்சங்கர், கெங்கவல்லி நல்லதம்பி மற்றும் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த கோயிலுக்கு அடிக்கடி எடப்பாடி பழனிசாமி வந்து, சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். இன்று நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், வழிபாடு நடத்த வந்த இடத்தில், திடீரென எடப்பாடி தியானத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.