சென்னை: எடப்பாடிக்கு நெருக்கமான பிரபல தொழிலதிபர் மற்றும் வேலுமணி நண்பரும், அதிமுக நிர்வாகியின் வீடுகளில் அமலாக்கத்துறை, வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக நிர்வாகிகள், நெருக்கமானவர்களை குறி வைத்து சோதனை நடத்தி வருவதால் தலைவர்கள் கலக்கம் அடைந்தள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கருக்காகுறிச்சியை சேர்ந்தவர் முருகானந்தம் (53). புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பாஜ பொருளாளர்.
இவரது அண்ணன் ரவிசந்திரன் (55), தம்பி பழனிவேல் (50). இதில் பழனிவேல் அதிமுக மாவட்ட இளைஞர் அணி செயலாளராக உள்ளார். ரவிச்சந்திரன் கறம்பக்குடி ஒன்றிய அலுவலகத்தில் துணை பிடிஓவாக பணியாற்றி வருகிறார். முருகானந்தமும், பழனிவேலும் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக முழுவதும் சோலார் தெரு விளக்குகள் அமைக்கும் ஒப்பந்தம் மற்றும் பல்வேறு பொதுப்பணித்துறை ஒப்பந்தம் எடுத்து பணி செய்து வந்தனர். இவர்கள் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர்கள் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் கடந்த 2022ம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இவர்களது வீடுகளில் சோதனை நடத்தி பல்வேறு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அப்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் சட்ட விரோத பண பரிமாற்றங்கள் நடந்திருப்பதாக தெரியவந்ததை தொடர்ந்து அமலாக்கத்துறை இந்த வழக்கு தொடர்பான விவரங்களை லஞ்ச ஒழிப்புத்துறையிடமிருந்து கேட்டுப்பெற்றது.
அதனடிப்படையில் மதுரை, சென்னையிலிருந்து அமலாக்கத்துறையினர் 20 பேர் 7 வாகனங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினருடன் நேற்று அதிகாலை புதுக்கோட்டைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் குழுக்களாக பிரிந்து காலை 6.30 மணிக்கு புதுக்கோட்டை சார்லஸ் நகரில் உள்ள முருகானந்தம் வீட்டுக்கு வந்தனர். அங்கு வீட்டின் கதவு, ஜன்னல்களை அடைத்ததுடன், வீட்டிலிருந்த அனைவரது செல்போன்களையும் வாங்கி வைத்துக்கொண்டனர். பின்னர் வீடு முழுவதும் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர். கருக்காகுறிச்சியில் உள்ள அவரது மற்றொரு வீட்டிலும் ஒரு குழுவினர் சோதனையிட்டனர்.
காலை 7 மணிக்கு தொடக்கிய சோதனை மாலை 6.10 மணிக்கு முடிந்தது. சோதனை முடித்து வெளியே வந்த அதிகாரிகள் இரண்டு பைகளில் கட்டு, கட்டாக ஆவணங்கள், ஹார்டு டிஸ்க், பென் டிரைவ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதேபோல், கருக்காகுறிச்சியில் உள்ள ரவிச்சந்திரன், பழனிவேல் வீடுகளிலும் காலை 6.30 மணி முதல் சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் சோலார் விளக்குகள் ஒப்பந்தம் எடுத்து பணி செய்த பழனிவேலின் நண்பரான ஆலங்குடி கே.வி.எஸ் தெருவில் உள்ள மற்றொரு பழனிவேல் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இவர் புதுக்கோட்டையில் பெட்ரோல் பங்க் மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது வீட்டில் நேற்று மாலை 4.30 மணியளவில் சோதனை முடிந்தது. இவரது வீட்டில் இருந்தும் முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்னர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பர் இளங்கோவன் வீடு, கல்லூரிகள், உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். அந்த சோதனையில் ரூ.40 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோல் எடப்படிக்கு நெருக்கமான பிரபல நெல்லை தொழிலதிபரின் அலுவலகத்திலும் சோதனை நடந்தது.
நெல்லை மாவட்டம், வடக்கு விஜயநாராயணத்தை சேர்ந்தவர் ஆர்.எஸ். முருகன். ஏ வகுப்பு அரசு ஒப்பந்ததாரர்.
இவர் பல்வேறு அரசு சாலை பணிகளை ஒப்பந்தம் எடுத்து நடத்தி வருகிறார். அதிமுகவில் நாங்குநேரி தொகுதி செயலாளராக இருந்தவர். ஜெயலலிதா இருந்த போது கடந்த 2011ம் ஆண்டு நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பின்னர் கடைசி நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டார். ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி அரசு ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார். இவர்தான் தென் மாவட்டங்களில் அதிமுக ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலை டெண்டர் எடுத்தவர். எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமானவராக இருந்தார்.
ஆர்எஸ் முருகன் தனது மகன் விஜயராகுல் திருமணத்தை கடந்த 17ம் தேதி நெல்லை மாநகராட்சி எதிரேயுள்ள வர்த்தக மையத்தில் மிகவும் ஆடம்பரமான முறையில் நடத்தினார். இந்த திருமணத்திற்காக மதுரையைச் சேர்ந்த பிரபல நடிகரும், எழுத்தாளருமான வேலராமமூர்த்தியின் உறவினரான மணமகள் வீட்டார் 600 பவுன் மற்றும் சீர் வரிசைகள் வழங்கியதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. மேலும் மணமக்கள் தங்கத்திலேயே மாலை போட்டிருந்ததாக வீடியோ மற்றும் போட் டோ வைரலானது. திருமண விழாவில் அரசியல் பிரமுகர்கள், முக்கிய தொழிலதிபர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், ஆர்.எஸ்.முருகன் அலுவலகம் நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள பிரபல பெண்கள் கல்லூரி அருகே அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு கடந்த திங்கள்கிழமை ஒரு காரில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். காலையில் தொடங்கிய இந்த சோதனை மாலை 6.30 மணி வரை நீடித்தது. இந்தச் சோதனையின் போது அரசு ஒப்பந்தங்கள் பெற்ற ஆர்.எஸ். முருகன் பல்வேறு நிறுவனங்களுக்கு பணம் வழங்கிய வகையில் டிடிஎஸ் பிடித்தம் செய்த தொகையை வருமான வரித்துறைக்கு செலுத்தவில்லை என்பதன் அடிப்படையில் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் இந்த சோதனை நடந்ததாக தகவல்கள் தெரிவித்தன. இந்தச் சோதனையின் அடிப்படையில் ஆர்எஸ் முருகனின் வங்கி கணக்குகள் தொடர்பாகவும், வரவு செலவு தொடர்பாகவும் நெல்லை மத்திய கூட்டுறவு வங்கியிலும் மற்றொரு வருமான வரித் துறை குழுவினர் சோதனை நடத்தினர். எடப்பாடிக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகம் மற்றும் வேலுமணியின் நண்பர் வீட்டில் சோதனை என அதிமுக தலைவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* ஆர்எஸ் முருகன் மகன் திருமணம் கடந்த 17ம் தேதி மிகவும் ஆடம்பரமாக நடந்தது. இந்த திருமணத்திற்காக மதுரையைச் சேர்ந்த பிரபல நடிகரும், எழுத்தாளருமான வேலராமமூர்த்தியின் உறவினரான மணமகள் வீட்டார் 600 பவுன் மற்றும் சீர் வரிசைகள் வழங்கியதாகவும், மணமக்கள் தங்கத்தால் மாலை அணிந்திருந்ததாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.
* வேலுமணியுடன் தொடர்புக்கு பின்
1,260 மடங்கு உயர்ந்த சொத்துகள்உதவி இயக்குனர் ஊராட்சிகள் துறையில் வேப்பங்குடி ஊராட்சியில் எழுத்தராக பணியாற்றி வந்த முருகானந்துக்கு அவ்வப்போது உயர் அதிகாரிகள் தொடர்பு கிடைத்துள்ளது. அவர்களுக்கு செய்ய வேண்டியதை செய்து அதன்படி மாஜி அமைச்சர் வேலுமணியுடன் தொடர்பு கிடைத்துள்ளது. பின்னர் விருப்ப ஓய்வு பெற்று பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார்.
கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணியுடன் முருகானந்தத்திற்கு தொடர்பு ஏற்பட்டு, அவர் மூலமாக அரசு ஒப்பந்தங்கள் எடுத்து செய்து வந்ததாக தெரிகிறது. இதனை வைத்து முருகானந்தம் தன் தம்பி பழனிவேலுக்கு பல நூறு கோடி அளவில் உள்ளாட்சிதுறையில் காண்ட்ராக்ட் பெற்று கொடுத்துள்ளார். அதன்பிறகு இவர்களது சொத்துமதிப்பு மலமலவென உயர்ந்துள்ளது.
கடந்த 2017 முதல் 2020ம் ஆண்டுக்குள் இவர்களின் சொத்து மதிப்பு 1,260 மடங்கு உயர்ந்ததாகவும், அந்த சொத்து முழுவதும் வருமானத்துக்கு அதிகமாக வாங்கப்பட்டவை என்ற புகார் எழுந்தது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளது. குறைந்த நாட்களில் கோடிக்கணக்கில் பணம் சம்பாத்தித்தால் அதனை முறையாக கணக்கு காட்டி சட்டத்தில் இருந்து தப்பிக்க 10 பேர் கொண்ட ஆடிட்டர் குழு அமைத்துள்ளனர். பணத்தை கணக்கில் காண்பிக்க உறவினர்கள் பெயரில் பல நிறுவனங்களை தொடங்கி அதன் மூலம் கிடைத்த வருவாய் என கணக்கு காட்டி வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
* மனைவியை பஞ்சாயத்து தலைவராக்க ரூ.4 கோடி வரை செலவு செய்தவர்
முருகானந்தத்தின் மனைவி காந்திமதி தற்போது முள்ளங்குருச்சி பஞ்சாயத்து தலைவராக உள்ளார். கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் காந்திமதி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் மனைவி காந்திமதியை வெற்றி பெற வைக்க ரூ.4 கோடி வரை முருகானந்தம் செலவு செய்துள்ளார் என்று அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பேசி வந்தது குறிப்பிடத்தக்கது.
* அண்ணாமலை யாத்திரைக்கு வாரி இறைக்கப்பட்ட பணம்
வருமான வரித்துறையினர் சோதனைக்கு பிறகு பாஜவில் முருகானந்தம் இணைந்த பின்னர் முருகானந்ததிற்கும், அவரது தம்பி பழனிவேலுக்கும் சொத்து பிரச்னை ஏற்பட்டது. இதனால் பழனிவேலு அதிமுகவில் இணைந்தார். இருவருக்கும் சொத்து பிரச்னை இருந்து வந்தநிலையில் சொத்துகளை பாகப்பிரிவினை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. முருகானந்தம் பாஜவில் சேர்ந்த பிறகு மாவட்டத்தில் நடக்கும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தார்.
பாஜ மாநில தலைவர் அண்ணாமலை புதுக்கோட்டை மாவட்டத்தில் நடத்திய யாத்திரைக்கு பல உதவிகளை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அண்ணாமலை புதுக்கோட்டைக்கு வந்தபோது முருகானந்தத்தை பெயர் சொல்லி பேசி அவர் பக்கத்திலேயே நிறுத்திக்கொண்டார். இப்படி கட்சிக்கு உதவியாக இருந்தவர் வீட்டிலேயே இப்படி ஒரு சோதனையா என அவரது ஆதரவாளர்களுக்குள் பரவலாக பேசிக்கொண்டனர்.
* மனைவி பெயரில் ஐடி கம்பெனி
முருகானந்தம் யுனிகொயர் டெக்னாலஜிஸ் என்ற பெயரில் ஐ.டி கம்பெனியை கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியுள்ளார். இதன் இயக்குனராக இவரது மனைவி காந்திமதி இருந்து வருகிறார். இதேபோல் கார்லாக் கன்ஸ்டரக்சன் என்ற பெயரில் ரூ.1 கோடி முதலீட்டில் ஒரு கட்டுமாண நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலமும் பல கட்டுமான பணிகள் நடந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் மேலும் 2 நிறுவனங்கள் உறவினர்கள் பெயரில் தொடங்கியுள்ளதாகவும், அனைத்து நிறுவனங்களும் 2018ம் ஆண்டுக்கு பிறகு தொடங்கி மத்திய பெருநிறுவனங்கள் துறை அமைச்சகத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
* ஐடி ரெய்டால் பாஜவில் இணைந்தார்
ஊராட்சி எழுத்தராக இருந்து தொழிலதிபராக மாறி பல கோடி சொத்து குவித்த முருகானந்தம் வீட்டில் கடந்த 2021ம் ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடந்தது. இந்த சோதனைக்கு பின்னர் முருகானந்தம் திடீரென பாஜவில் இணைந்தார். மாநில நிர்வாகிகள் புதுக்கோட்டை வரும்போது எல்லாம் அவர்களுக்கு தேவையானதை முருகானந்தம் பார்த்துக்கொண்டதால் உடனடியாக அவருக்கு கட்சியில் புதுக்கோட்டை மாவட்ட பொருளாளர் பதவி வழங்கப்பட்டது.
* தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் 3வது முறையாக சோதனை
அதிமுக ஆட்சியில் 2017- 2020ல் தமிழ்நாடு முழுவதும் எல்இடி, சோலார் விளக்கு, ப்ளீச்சிங் பவுடர் தொடர்பான டெண்டர் முறைகேட்டில் தொடர்புடையதாக கூறி, புதுக்கோட்டையில் பாஜக, அதிமுக பிரமுகர்கள் வீடுகள் உள்பட 5 இடங்களில் நேற்று அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இவர்களுடன் சம்பந்தப்பட்ட காலங்களில் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக திண்டுக்கல்லை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரத்தினத்தின் ஜிடிஎன் சாலையில் உள்ள தரணி குழுமம் அலுவலகத்திலும் நேற்று சோதனை நடந்தது.
இரண்டு கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 6 பேர் காலை 8 மணி முதல் மாலை 5 வரை 9 மணி நேரம் சோதனை மேற்கொண்டனர். சோதனை முடிந்து கிளம்பிய அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றுள்ளனர். மணல் குவாரியில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்தது தொடர்பாக கடந்த 12.9.2023 அன்று ரத்தினம் வீடு, அலுவலகம் மற்றும் மைத்துனர் ஹனிபா நகரில் உள்ள கோவிந்தன் வீடு, அலுவலகம் ஆகிய 4 இடங்களில் இரண்டு நாட்கள் சோதனை நடைபெற்றது. அதேபோல் 25.11.2023 அன்று ரத்தினத்தின் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதுவரை ரத்தினம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்று முறை சோதனை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.