கோவை: தமிழ்நாடு சட்டசபை தேர்தல், பாராளுமன்ற தேர்தல் தோல்வியடைந்ததை தொடர்ந்தும், அந்த தோல்விகளில் இருந்து மீளும் வகையில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்தார். அந்த சுற்றுப்பயணம் கோவையில் இருந்து இந்த மாத இறுதியில் துவங்க உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில், கோவை மாவட்ட ஒருங்கிணைந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் கோவை ஹூசூர் சாலையில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசுகையில், ‘அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க இருக்கிறார். இதற்காக அவர் வருகிற 31ம் தேதி மற்றும் பிப்ரவரி 1ம் தேதி கோவைக்கு வருவதாக இருந்தது. ஆனால், சில நிர்வாக காரணங்களால் அது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அவரது சுற்றுப்பயண தேதி பின்னர் அறிவிக்கப்படும்’ என்றார்.
Advertisement


