சேலம்: சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று மகனுடன் நம்பர் பிளேட் இல்லாத காரில் ரகசியமாக வெளியே சென்று திரும்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஞாயிறு இரவு சேலம் வந்தார். நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் நிர்வாகிகளை சந்தித்து பேசினார். நேற்று பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அவரது முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தனர். குறிப்பாக குவைத் மண்டல பாமக தலைவர் இன்ஜினியர் சீனிவாசன் அதிமுகவில் சேர்ந்தார். அவர் கூறுகையில், ‘பாமக தற்போது இருக்கும் நிலையில் தொண்டர்களாகிய நாங்கள் என்ன செய்வது என தவிக்கிறோம். எனவே அதிமுகவில் இணைந்துவிட்டேன்’ என்றார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி, நேற்று காலை 10 மணிக்கு ரகசியமாக வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டு சென்றார். 12 மணிக்கு திரும்பி வந்தார். பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கூட தெரியாமல் மகன் மிதுனுடன், நம்பர் பிளேட் இல்லாத காரில் அவர் திரும்பி வந்தார். அவர் எங்கு போனார்? யாரை சந்தித்தார் என்பது யாருக்கும் தெரியவில்லை. இதனால், அவரை பார்க்க வந்த மாஜி மந்திரி விஜயபாஸ்கர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார். இந்நிலையில் சென்னையில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கிறது. இதற்காக நேற்று மாலை சேலத்தில் இருந்து விமானம் மூலம் எடப்பாடி பழனிசாமி சென்னை புறப்பட்டு சென்றார். கூட்டம் முடிந்தவுடன் மாலையில் சேலம் வருகிறார்.