Saturday, April 20, 2024
Home » தோல்வி பயத்தில் மீண்டும் கூட்டணிக்கு பாஜ முயற்சி தனி அணி அமைப்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதி: வலிய வந்து ஆதரவு  தெரிவித்த ஓபிஎஸ், டி.டி.வி. கடும் அதிர்ச்சி

தோல்வி பயத்தில் மீண்டும் கூட்டணிக்கு பாஜ முயற்சி தனி அணி அமைப்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதி: வலிய வந்து ஆதரவு  தெரிவித்த ஓபிஎஸ், டி.டி.வி. கடும் அதிர்ச்சி

by Ranjith

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தோல்வி பயத்தில் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜ முயற்சி செய்து வருகிறது. அதே நேரத்தில் தனி அணி அமைப்பதில் எடப்பாடி உறுதியாக இருந்து வருகிறார். பாஜவின் செயலால் ஓபிஎஸ், டி.டி.வி. தினகரன் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். தமிழகத்தில் கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜ இருந்தது. சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு பிறகு இரண்டு கட்சியினரும், ஒருவரை ஒருவர் கடுமையாக வார்த்தை போரால் தாக்கி கொண்டனர்.

இதனால், இந்த கூட்டணி உடைந்தது. அதிமுக கூட்டணியில் இருந்து பாஜவை வெளியேற்றியது. தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி அமைப்பதற்கான நடவடிக்கையில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளனர். அதே நேரத்தில் தமிழகத்தில் பாஜ கூட்டணியில் தங்களுடைய தொழில் வளர்ச்சிக்காகவும், தொழிலை காப்பாற்றுவதற்காகவும், சுயலாபத்துக்காகவும் செல்வாக்கு இல்லாத கட்சிகள் தான் கூட்டணி அமைத்துள்ளன.

அதாவது நிர்வாகிகளே இல்லாத ஜி.கே.வாசன், வேலூரில் மட்டுமே சமுதாய பலத்தில் உள்ள ஏ.சி. சண்முகம், பெரம்பலூர் பகுதியில் மட்டும் தொண்டர்கள் பலம் கொண்ட பாரிவேந்தர், தென்மாவட்டங்களில் ஒருசாரார் ஆதரவு தெரிவிக்கும் ஜான் பாண்டியன், எந்த ஆதரவுமே இல்லாத தேவநாதன் யாதவ் போன்றவர்கள் தான் பாஜ கூட்டணியில் உள்ளனர். அவர்களிடம் பேசுவதற்காக தமிழக பாஜ மூத்த தலைவர்கள் அடங்கிய கமிட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி தனி அணி அமைப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளார். இதற்காக செல்வாக்கு, தொண்டர்கள் பலம் உள்ள பாமக, தேமுதிக கட்சிகளுடன் அதிமுக கூட்டணிக்கு தயாராகி வருகிறது. புதிய தமிழகம் கட்சியுடன் அதிமுக பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது. ஓரிரு நாளில் கூட்டணி உறுதியாகி, தொகுதிகள் அறிவிக்கப்பட உள்ளது.அதே நேரத்தில் பாஜ, அதிமுக உறவு இனிமேல் கிடையாது என்பதில் எடப்பாடி உறுதியாக இருந்து வருகிறார்.

ஆளுங்கட்சியாக இருந்த போது அதிமுக தலைவர்கள் அமலாக்கத்துறை பயத்தில் தான் பாஜவுடன் கூட்டணி வைக்க வலியுறுத்தி வந்தனர். தற்போது எதிர்க்கட்சியாக தான் உள்ளோம். அப்படியிருக்கும் போது அமலாக்கத்துறையை பார்த்து ஏன் பயப்பட வேண்டும் என்ற எண்ணத்துக்கு வந்து விட்டனர். பாஜ இல்லாவிட்டால் 18 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள சிறுபான்மையினர் வாக்குகளை பெற்று விடலாம் என்று எடப்பாடி நினைக்கிறார். இதனால் தான் எஸ்.டி.பி.ஐ. கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளனர்.

அதே நேரத்தில் தமிழகத்தில் பாஜவிற்கான எதிர்ப்பு அலை என்பது மக்களிடம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. அதாவது, கடந்த 10 ஆண்டு ஒன்றிய பாஜ ஆட்சியில் எந்த திட்டமும் தமிழகத்திற்கு வரவில்லை. புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது கூட தமிழகத்திற்கு எந்த நிவாரணமும் வழங்காததால் மக்கள் கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர். வடமாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் ஒரு நிலைப்பாடு, தமிழகத்திற்கு ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளதால் மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.

அப்படியிருக்கும் போது இந்த நேரத்தில் பாஜவுடன் கூட்டணி அமைத்தால் நாமும் சேர்ந்து அழிந்து விடுவோம், டெபாசிட் பறிப்போய்விடும் என்று எடப்பாடி கருதுகிறார். இதற்காக தான் இனிமேல் ஒருபோதும் பாஜவுடன் கூட்டணி கிடையாது, தனி அணி என்று தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்து வருகிறார். அதே நேரத்தில் பாஜவுக்கு வலிய வந்து ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன் ஆதரவை கொடுப்பதாக அறிவித்துள்ளனர். ஆனால், அதிமுக எப்படியாவது தங்கள் பக்கம் வந்து விடும் என்ற நினைப்பில் பாஜ இருந்து வருகிறது.

இதனால் தான் இதுவரை ஓபிஎஸ், டிடிவியிடம் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. இது ஓபிஎஸ், டி.டி.வி.தினகரனுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாஜவை நம்பி தான் கட்சியில் இருந்து வெளியேறினோம். இப்போது கட்சி பறிபோய் விட்டது. இப்படி நம்பியவர்களை நடுவழியில் விட்டு விட்டார்களே என்று ஓபிஎஸ், டிடிவி ஆகியோர் புலம்ப தொடங்கி விட்டனர்.

இதனால், இன்று சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திப்பதை ஓபிஎஸ், டி.டி.வி. தினகரன் ஆகியார் புறக்கணித்துள்ளனர். எவ்வளவு பாஜ அழைப்பு விடுத்தும், அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் எடப்பாடி தனி அணி அமைப்பத்தில் தீவிரம் காட்டி வருகிறார். இதனால் கூட்டணியில் பெரிய கட்சிகள் சேர வாய்ப்பில்லை என்பதால் தமிழக பாஜ தோல்வி பயத்தில் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

3 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi