பெரம்பூர்: அதிமுக மற்றும் பாஜ இடையே சமீப காலமாக வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி, ஊடகங்களில் பேட்டி அளித்து வருகின்றனர். அதன்படி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து பாஜ மாநில தலைவர் அண்ணாமலை சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வந்தார். இதற்கு அதிமுகவின் மூத்த தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். இந்நிலையில், எடப்பாடி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த அண்ணாமலையை கண்டித்து, பல்வேறு இடங்களில் அவரது உருவ பொம்மையை எரித்து, அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, கொளத்தூர் செந்தில் நகர் சிக்னல் அருகே அதிமுக அம்மா பேரவை துணைச் செயலாளர் கொளத்தூர் கணேசன் தலைமையில் அதிமுகவினர், அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்தனர். ராஜமங்கலம் போலீசார் அவர்களை கலைந்து போக செய்தனர். இந்நிலையில், அனுமதி இல்லாமல் ஒன்று கூடி உருவ பொம்மை எரித்தது தொடர்பாக, அதிமுக நிர்வாகி கொளத்தூர் கணேசன் உட்பட சம்பவத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.