சென்னை: கட்சியின் தலைமை அலுவலகத்தில் 2வது நாளாக அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு மாநிலங்களவை பதவியை விட்டுக்கொடுக்க கூடாது என்று அதிமுக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று முன்தினம் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பொறுப்பாளர்கள் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், அதிமுக கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தல் பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனாலும், இந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, இன்று 2வது நாளாக அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், திருப்பூர், பெரம்பலூர், அரியலூர், கரூர், கோவை, நீலகிரி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்்த கூட்டத்திலும், மாநிலங்களவை தேர்தலில் 2 இடங்களுக்கு வேட்பாளர் தேர்வு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவது அதிமுகவின் கடமை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று கூறியிருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய பல்வேறு மாவட்ட செயலாளர்கள், தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை எம்பி சீட் வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. அதனால் தேமுதிகவுக்கு ஒரு சீட் வழங்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், தேமுதிகவுக்கு தற்போது பெரிய அளவில் வாக்கு வங்கியும் இல்லை.
இதனால் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு பெரிய லாபம் எதுவும் கிடைக்கப்போவதில்லை. அதனால், அதிமுகவில் கட்சி பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் இரண்டு பேருக்கு மட்டுமே அதிமுக சார்பில் மாநிலங்களவை சீட் வழங்க வேண்டும். குறிப்பாக, தென் மாவட்டங்களை சேர்ந்த ஒரு நபருக்கும், வடமாவட்டத்தை சேர்ந்த ஒரு கட்சி நிர்வாகிக்கும் எம்பி பதவி வழங்க வேண்டும். இதன்மூலம் அதிமுக கட்சியில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக சட்டமன்ற தேர்தல் பணியாற்றுவார்கள். இதை கருத்தில் கொண்டு கட்சி தலைமை செயல்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதன்பிறகு பேசிய எடப்பாடி பழனிசாமி, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் விருப்பம் நிச்சயமாக நிறைவேற்றப்படும். கட்சியின் மூத்த நிர்வாகிகளுன் ஆலோசனை நடத்தப்பட்டு, விரைவில் மாநிலங்களவைக்கு போட்டியிடும் இரண்டு வேட்பாளர்கள் யார் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.