திருவாரூர்: தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜ கூட்டணி ஆட்சி தான் அமையும் என அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மீண்டும் தெரிவித்துள்ளார். ஜூன் 22ம்தேதி மதுரையில் பாஜ சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். கூட்டத்திற்கு பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கீழடியை பொறுத்தவரை ஏற்கனவே சான்றுகள் அளிக்கப்பட்டுள்ளது. கூடுதல் சான்றுகள் தேவை என கூறப்பட்டுள்ளது.
கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற பெயர்கள் நீண்ட காலமாக இருந்து வரும் நிலையில் தமிழக முதல்வர் சரஸ்வதி என்ற ஒரு நதியே இல்லை என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. டாஸ்மாக் நிர்வாகம் என்பது ஒரு கம்பெனி. அந்த கம்பெனியில் நடக்கக்கூடிய ஊழல் எதுவாக இருந்தாலும் அதில் தலையிட அமலாக்க துறைக்கு முழு அதிகாரம் உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜ அங்கம் வகிக்கும் தேஜ கூட்டணியின், கூட்டணி ஆட்சிதான் அமையும். முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.