Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கெஞ்சி பதவி வாங்கிய எடப்பாடி சவால் விடுக்க யோக்கியதை இல்லை: அமைச்சர் ரகுபதி சரமாரி தாக்கு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை திமுக மாவட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சொல்லுகின்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் வீண் குற்றசாட்டுகளை தவிர வேறு ஒன்றும் இல்லை. அவர் மீது உள்ள குற்றச்சாட்டுகள் விசாரணைக்கு வரும்போது தெரியவரும். அவர் ஒன்றும் நிரபராதி அல்ல. அவர் எந்த தவறும் செய்யாதவரும் கிடையாது. அவர் திமுக மீது பழி சுமத்துவதற்கு எந்த வித தகுதியும் உரிமையும் கிடையாது.

கரப்பான் பூச்சியை போன்று ஊர்ந்து சென்று பதவியை வாங்கிய எடப்பாடி பழனிச்சாமிக்கு, காட்டமாக கேள்வி கேட்கின்ற யோக்கியதையோ, அருகதையோ, தகுதியோ கிடையாது. அவர் தைரியசாலி அல்ல. யாரையும் தைரியமாக எதிர்கொண்டு பதவி வாங்கவில்லை. கெஞ்சி தான் பதவி வாங்கினார். அவருக்கு சவால் விடுவதற்கான யோக்கியதை கிடையாது. அவர்களிடம் சவாலுக்கு முதலமைச்சர் அல்ல, துணை முதலமைச்சர் பதில் கூறுகிறேன் என்றால் சந்திக்க வேண்டியது தானே.

ஒரேமேடையில் விவாதிக்க தயாராக இருக்கிறேன் என்று துணை முதலமைச்சர் கூறிய பிறகு அந்த சவாலை எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க வேண்டியது தானே. 2021ஆக இருக்கட்டும், 2024 நாடாளுமன்ற தேர்தலாக இருக்கட்டும் வலுவான கூட்டணி அமைப்பேன் என்று தான் எடப்பாடி தெரிவித்திருந்தார். ஆனால் அவரால் வலுவான கூட்டணி அமைக்க முடியவில்லை. 2024 தேர்தலிலும் அவரால் முடியவில்லை. அதே நிலைதான் 2026 தேர்தலிலும் அவரால் கூட்டணி அமைக்க முடியாது. அதற்கான வாய்ப்பு நிச்சயம் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

* ‘அத்தைக்கு முதலில் மீசை முளைக்கட்டும்’ நடிகர் விஜய் குறித்த கேள்விக்கு பதில்

அமைச்சர் ரகுபதி கூறுகையில், ‘திருமாவளவன் உறுதியாக திமுக கூட்டணியில் தான் இருக்கிறேன், 2026யிலும் திமுக கூட்டணியில் தான் இருப்பேன் என்று கூறிவிட்டார். கூட்டணியில் இருப்பவர்கள் விமர்சிப்பது இயற்கை தான். ஆனால் விமர்சிப்பதற்கும், கூட்டணிக்கும் எந்த ஒரு பிரச்னையும் கிடையாது. கூட்டணியில் உள்ள அனைவரும் மு.க.ஸ்டாலின் தலைமையை ஏற்றுக் கொள்கிறோம் என்று வந்தவர்கள் தான். யாரும் அவரது தலைமையை ஏற்கவில்லை என்று யாரும் சொல்லவில்லை, மறுக்கவில்லை.

நாங்கள் அனைவரையும் சுதந்திரமாக நடத்துகின்ற கட்சி திமுக. சமத்துவம் எங்கள் கொள்கை எல்லோரையும் சமமாக நடத்துபவர் தான் முதலமைச்சர். அன்போடு அரவனைத்து செல்பவர் தான் முதலமைச்சர். யாரையும் அடிமைப்படுத்த வேண்டிய எண்ணம் கிடையாது. அவசியமும் கிடையாது. அமைச்சர் ரகுபதி கூறுகையில், ‘விஜய், எம்ஜிஆர் பாணியை பின்பற்ற பார்க்கிறார்.

எல்லாரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது. நிச்சயமாக அதில் அவர் தோல்வியைத்தான் சந்திப்பார். திருமாவளவன், விஜய், சீமான் இவர்கள் எல்லாம் ஒருங்கிணைந்தால் பார்த்து கொள்ளலாம். அத்தைக்கு முதலில் மீசை முளைக்கட்டும், பிறகு பார்த்து கொள்ளலாம். சர்வாதிகாரிகளுக்கு நிச்சயம் தமிழ்நாட்டில் மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள். அதை புரியாமல் சீமான் கூறினால் நாங்கள் பொறுப்பாக முடியாது.’ என்றார்.