சென்னை: சென்னை பசுமை வழிச்சாலையில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில் வீட்டில் சிறிது நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருத்து. இதுகுறித்து வீட்டில் பணியில் இருந்த ஊழியர்கள் உடனே அபிராமபுரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அதன்படி வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் விரைந்து வந்து எடப்பாடி பழனிசாமி வீடு முழுவதும் தீவிர சோதனை நடத்தினர்.இதில் வெறும் புரளி என தெரியவந்தது. போலீசார் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் 25ம் தேதி இதே பசுமை வழிச்சாலையில் உள்ள வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. 4 நாட்களுக்கு முன்பு சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.