
புதுடெல்லி: எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளரானது செல்லும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்திருந்த ரிட் மனுவில்,‘‘அதிமுகவின் பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க வேண்டும். அதேப்போன்று கட்சி விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்கள் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும்.
மேலும் கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சி போட்டியிட அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
இதையடுத்து அதனை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பத்து நாட்களில் முடிவெடுத்து அறிவிப்பை வெளியிட வேண்டும் என கடந்த 12ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இதில் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய காலக்கெடு என்பது நாளையோடு முடிவடையுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், ஆணையர்கள் அனூப் சந்திர பாண்டே, அருண் கோயல் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் தலைமையில் நேற்று ஆலோசனை நடத்தினர்.
அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், ஆணையர்கள் முன் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில்,‘‘கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தரப்பில் புலிகேசி நகர் தொகுதியில் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் அதிமுக தேர்தல் விதிமுறைகளை மாற்றியமைத்தமைக்கு ஆணையம் உடனடியாக ஏற்க வேண்டும். அதேப்போன்று எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் அங்கீகரிக்க வேண்டும். இதில் கால தாமதம் செய்யக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த கோரிக்கையையும் தேர்தல் ஆணையர்கள் பதிவு செய்து கொண்டனர். இந்த நிலையில், அதிமுக பொதுக் குழு தீர்மானங்களை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளது.பழனிசாமியை அங்கீகரிக்கக் கூடாது என்ற பன்னீர் செல்வத்தின் கோரிக்கையை ஆணையம் நிராகரித்துள்ளது தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை அடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது.தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பால் ஓ பன்னீர் செல்வம் தரப்புக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.