இடைப்பாடி: இடைப்பாடி போலீஸ் ஸ்டேஷனில் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. எஸ்பி அருண்கபிலன் நேரில் விசாரணை நடத்தி வருகிறார். சேலம் மாவட்டம் இடைப்பாடி போலீஸ் ஸ்டேஷனுக்குள் இன்று அதிகாலை 4 மணியளவில், டூவீலரில் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென பெட்ரோல் குண்டு வீசினார். அந்த பெட்ரோல் குண்டு, ஸ்டேஷன் காம்பவுண்டிற்குள் வராண்டாவில் வந்து விழுந்தது. ஆனால் வெடித்து தீ பிடிக்கவில்லை. உள்ளே இருந்து வெளியே ஓடி வந்த போலீசார், பெட்ரோல் குண்டு சிதறி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். வெளியில் பைக்கில் மின்னல் வேகத்தில் ஒருவர் தப்பிச் சென்றார்.
இச்சம்பவம் பற்றி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பேபிக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். அவர் விரைந்து வந்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து மாவட்ட எஸ்பி அருண்கபிலன், சங்ககிரி டிஎஸ்பி ராஜா ஆகியோர் வந்து நேரடி விசாரணை நடத்தினர். அதில், பீர் பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி, திரியில் தீயை பற்ற வைத்து மர்மநபர் வீசியுள்ளார். ஆனால், விழுந்த வேகத்தில் தீ அணைந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது தெரியவந்தது. பாட்டிலில் இருந்த திரி கருகியிருந்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்களை வரவழைத்தனர். அவர்கள் வந்து, பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் தடயங்களை சேகரித்தனர். டிஎஸ்பி ராஜா தலைமையிலான போலீசார், மர்மநபர் தப்பிச் சென்ற பாதையில் இருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். அதிகாலை நேரத்தில் போலீஸ் ஸ்டேஷனில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.