சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ‘அதிமுக கள ஆய்வு’ குழுவினரின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. அண்மையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. தற்போதுள்ள கூட்டணியில் நிச்சயம் மாற்றம் இருக்கும். எனவே, பிற கட்சி தலைவர்களை பற்றி தேவையில்லாமல் அதிமுக நிர்வாகிகள் விமர்சிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டன. மேலும், கட்சியை தேர்தலுக்கு தயார்படுத்தும் நோக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 10 பேர் அடங்கிய ‘கள ஆய்வு குழு’ அமைக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்த குழுவில், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, வளர்மதி, வரகூர் அருணாசலம் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். இந்த குழு அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று கள ஆய்வு செய்து, அதன் விபரங்களை வரும் டிச.7ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.
அந்தவகையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை 10 மணிக்கு ‘கள ஆய்வுக்குழு’ ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, கட்சியில் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்ட வாரியாக, கிளை, வார்டு, வட்ட கழகம் மற்றும் சார்பு அமைப்புகளின் செயல்பாடுகளை இந்த குழு நேரடியாக ஆய்வு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.