சென்னை: அதிமுக கிளை, வார்டு, வட்ட கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்து, அவற்றின் பணிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விபரங்களை அறிக்கையாக அளிப்பதற்காக, கட்சியின் சார்பில் `கள ஆய்வு குழு’ அமைக்கப்பட்டுள்ளது.
கே.பி.முனுசாமி (அதிமுக துணை பொதுச்செயலாளர்), திண்டுக்கல் சீனிவாசன் (பொருளாளர்), நத்தம் இரா.விசுவநாதன் (துணை பொதுச்செயலாளர்), பி.தங்கமணி (அமைப்பு செயலாளர்), எஸ்.பி.வேலுமணி (தலைமை நிலைய செயலாளர்), டி.ஜெயக்குமார் (அமைப்பு செயலாளர்), சி.வி.சண்முகம் (அமைப்பு செயலாளர்), செம்மலை (அமைப்பு செயலாளர்), பா.வளர்மதி (அதிமுக மகளிர் அணி செயலாளர்), வரகூர் அ.அருணாசலம் (அமைப்பு செயலாளர்) ஆகியோர் அடங்கிய குழுவினர் கள ஆய்வு செய்து, அதன் விபரங்களை டிசம்பர் 7ம் தேதிக்குள் கட்சி தலைமைக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கின்றனர்.
அதிமுகவின் ‘கள ஆய்வு குழு’வினர் நேற்று காலை சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடி ஆலோசனை நடத்தினர். நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், மொத்த உறுப்பினர்களில் 50 % வாக்குகள் கூட அதிமுக கட்சிக்கு கிடைக்கவில்லை. இதற்கான காரணம் என்ன என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து வருகிற நாட்களில் அனைத்து மாவட்டங்களுக்கும் நோில் சென்று ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.