சென்னை : மக்களின் வாழ்வில் துன்பம் நீங்கி இன்பம் பெருகட்டும் என்று எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து செய்தியில்,” மக்கள் நற்காரியங்களைத் தொடங்கும் போது, தங்குதடையின்றி சிறப்புடன் நடைபெற விநாயகப் பெருமானை முதலில் போற்றி வணங்குவர். விநாயகரைத் துதித்து நற்காரியங்களை மேற்கொண்டால் வெற்றி நிச்சயம் என்பது மக்களின் ஏகோபித்த நம்பிக்கையாகும்.
வினை தீர்க்கும் தெய்வமான விநாயகப் பெருமானின் அவதாரத் திருநாளாம் விநாயகர் சதுர்த்தியன்று, களி மண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாருக்கு எருக்கம் பூ மாலை அணிவித்து, அவருக்கு பிடித்தமான சுண்டல், கொழுக்கட்டை, அவல், பொரி, பழங்கள் போன்ற பொருட்களைப் படைத்து; அருகம்புல், மல்லி, செம்பருத்தி, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்து, விநாயகப் பெருமானை மக்கள் பக்தியுடன் வழிபடுவார்கள்.
வேண்டுவோருக்கு வேண்டுவன வழங்கும் வேழ முகத்தோனை, இந்த விநாயகர் சதுர்த்தி திருநாளில் மக்கள் அனைவரும் வணங்கி வழிபட்டு, அவர் தம் கருணையால் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகி வாழ்வில் அனைத்து வளமும் பெற்று, நோய் நொடி இல்லாப் பெரு வாழ்வு வாழ வேண்டும் என்ற எனது விருப்பத்தினைத் தெரிவித்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில், உளமார்ந்த ‘விநாயகர் சதுர்த்தி’ வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.