புதுக்கோட்டை: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் இன்று திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மாவட்ட விளையாட்டு மைதானத்தை ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி:
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கு இணங்க இன்று புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் அரசு திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தேன். விளையாட்டு மைதானத்தை ஆய்வு செய்தேன். விளையாட்டு மைதானத்தில் கட்டப்பட்டு வந்த உள் விளையாட்டு அரங்க பணிகளை முடிப்பதற்கு மேலும் ரூ.4.50 கோடி தேவைப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து இந்த பணிகளை மேற்கொள்ள ரூ. 3.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கான நிதி உரிமையை பெற டெல்லியில் நடைபெறும் நிதிஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் கலந்துகொண்டுள்ளார். இதனை அரசியல் ஆக்குவதற்காக எதிர்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்
அமலாக்க துறைக்கு பயந்து டெல்லிக்கு சென்றுள்ளதாக எதிர்கட்சியினர் கூறுவதற்கு நான் பல முறை பதிலளித்துள்ளேன். ஈடி இல்லை, மோடிக்கே பயப்பட மாட்டோம். மிரட்டி அடிபணிய வைப்பதற்கு திமுக ஒன்றும் அடிமை கட்சி அல்ல. பெரியார் கொள்கை வழியில் செயல்படும் சுயமரியாதை கட்சி. எதையும் சட்ட பூர்வமாக சந்திப்போம் என்றார்.