சென்னை : சென்னை அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள ராட்டினத்தில் 50 அடி உயரத்தில் சிக்கிய 36 பேர் பல மணி போராட்டங்களுக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர். ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில், இயந்திர கோளாறால் ராட்சத ராட்டினம் அந்தரத்தில் தொங்கியது. அப்போது ராட்டினத்தில் இருந்த கிட்டத்தட்ட 36 பேர் உயிர் பயத்தில் கூச்சலிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் ஸ்கை லிப்ட் வரவழைத்து 36 பேரையும் பத்திரமாக மீட்டனர். நல்வாய்ப்பாக தலைகீழாக மாட்டாமல், உட்கார்ந்த நிலையில் இருந்ததால் உயிருக்கு ஆபத்து இன்றி தப்பிய அவர்கள், செல்போன் மூலம் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதன் பின்னர் தான் மீட்பு நடவடிக்கைகள் தொடங்கியதாக குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில், ராட்டினம் பழுதான தனியார் பொழுது போக்கு பூங்காவில் அதிகாரிகள் இன்று ஆய்வு செய்ய உள்ளனர். விபத்து தொடர்பாக விளக்கம் கேட்டு பொழுதுபோக்கு பூங்காவிற்கு நீலாங்கரை காவல்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில் அதிகாரிகள் ஆய்வுசெய்ய உள்ளனர். பொழுதுபோக்கு பூங்காவில் மாநகராட்சி மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வுசெய்கின்றனர். காவல்துறை அறிவுறுத்தலின்படி பொழுதுபோக்கு பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.