செய்யூர்: இ.சி.ஆர்-சோத்துப்பாக்கம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், குவாரிகளில் இருந்து செல்லும் கனரக வாகனங்களால் ஆங்காங்கே மண் குவியல் ஏற்பட்டுள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரின் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான குவாரிகள் மற்றும் ஏரிகள் உள்ளன. இந்த குவாரிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் சென்னை, புதுச்சேரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கற்கள் மற்றும் எம்.சாண்ட் மண்ணை ஏற்றி செல்கின்றன. மறுபுறம் பல்வேறு தேவைகளுக்காக ஏரிகள் மற்றும் இதர பகுதியில் இருந்து சவுடு மண் கனரக வாகனங்களில் கொண்டு செல்லப்படுகிறது.
இவற்றில் பெரும்பாலான கனரக வாகனங்கள் இ.சி.ஆர் எல்லையம்மன் கோயில்-சோத்துப்பாக்கம் நெடுஞ்சாலையை பயன்படுத்தி வருகின்றன. இவ்வாறு செல்லும் லாரிகள் விதிகள் மீறி அதிவேகமாக செல்வது, வாகனங்கள் மீது தார்பாய்கள் ஏதும் மூடாமல் செல்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், லாரிகளில் இருந்து ஜல்லி கற்கள், மண் துகள்கள் சாலையில் படர்ந்து வருகின்றது. நாளுக்கு நாள் இந்த மண் மற்றும் சிறிய ஜல்லி கற்கள் சாலையோரங்களில் குவிந்து வருவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவ்வப்போது விபத்துகளில் சிக்கி வருகின்றனர். இதனை, அவ்வப்போது நெடுஞ்சாலை துறையினர் சாலையோரம் சேரும் மண் குவியலை அகற்ற வேண்டும். ஆனால், அவர்கள் அப்பணியில் ஈடுபடுவதில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே, இப்பகுதியில் மேலும் விபத்துகள் அதிகரிப்பதை தவிர்க்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.