சென்னை: கிழக்குக் கடற்கரைச் சாலையில் நடைபெற்றுவரும் சாலைப்பணிகளை, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். கிழக்குக் கடற்கரைச் சாலையில் நடைப்பெற்றுவரும் சாலைப் பணிகள் தொடர்பாக, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று நேரடியாக களஆய்வு மேற்கொண்டார்.
சென்னை மாநகரின் பிரதான நுழைவாயில் சாலைகளில் ஒன்றான கிழக்கு கடற்கரை சாலையின் போக்குவரத்து நெரிசலினை குறைக்கும் வகையில், திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை உயர்மட்ட சாலை மேம்பாலம் கட்டுவது குறித்து 2024-2025 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில், முதலமைச்சர் அனுமதியோடு, அறிவிப்பு வெளியிடப்பட்டது.
திருவான்மியூர் முதல் உத்தண்டி வரையிலான சாலை 15 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இச்சாலைப் பகுதியில் 17 போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன. எனவே, இச்சாலையை கடக்க சுமார் 45 நிமிடங்கள் முதல் 60 நிமிடங்கள் வரை ஆகிறது. இச்சாலையில் தற்பொழுது 69,000 வாகனங்கள் நாளொன்றுக்கு செல்கின்றன. திருவான்மியூர் முதல் உத்தண்டி வரையிலான 15 கிலோ மீட்டர் தூரத்தில், சாலையின் இருபுறத்திலும் 347 சிறுசாலைகள் / தெருக்கள் உள்ளன.
எனவே இச்சாலையை எவ்வளவு அகலப்படுத்தினாலும், அதிகமான வாகனப் போக்குவரத்தின் காரணமாக, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை உயர்மட்டச் சாலை அமைப்பதற்கான கருத்துரு தயாரிக்கப்பட்டு, அரசு பரிசீலணை செய்து வருவதாக தெரிவித்தார். கட்டப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் டைடல் பூங்கா சந்திப்பில் துவங்கி எல்பி சாலைச் சந்திப்பு, கொட்டிவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் அக்கரை வழியாக உத்தண்டியில் முடிவடையும்.
இப்பகுதிவாழ் பொதுமக்களின் தேவை கருதி, எல்பி சாலைச் சந்திப்பு, திருவான்மியூர் ஆர்டிஓ ஆபீஸ், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் மற்றும் அக்கரைச் சந்திப்பில் பாலத்தில் ஏறி அல்லது இறங்கிச் செல்லும் வகையில் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இப்பாலத்தின் மூலம் இப்பகுதியை 20 நிமிடங்களில் கடக்க இயலும். தற்போதைய ஆறு வழிச்சாலை அமைக்க நில எடுப்பு செய்யப்பட்டு வருகிறது. கூடுதல் நில எடுப்பு ஏதும் மேற்கொள்ளாமல், 18 மாதங்களுக்குள் இந்த சாலை மேம்பாலத்தை கட்டி முடிக்க வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தினார்.
சென்னை மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு, சென்னையில் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய திட்டங்களில் ஒன்றான “கிழக்கு கடற்கரை சாலையை“ திருவான்மியூர் முதல் அக்கரை வரை ஆறுவழித் தடமாக அகலப்படுத்தும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்கள். கிழக்குக் கடற்கரைச் சாலை, சென்னை பெருநகர், திருவான்மியூர், மாமல்லபுரம், புதுச்சேரி, சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, இராமநாதபுரம் மற்றும் துாத்துக்குடி வழியாக, கன்னியாகுமரியுடன் இணைக்கும் முக்கிய சாலையாக (மா.நெ.49) உள்ளது.
மேலும், தகவல் தொழில்நுட்பத் துறையின் அதிவேக வளர்ச்சி மற்றும் பெருகிவரும் அடுக்குமாடி கட்டிடங்களின் எண்ணிக்கை ஆகியவை இவ்வழித்தடத்தில் வாகனப்போக்குவரத்து எண்ணிக்கை மிகவும் அதிகமாகி உள்ளது. இச்சாலையினை ஆறுவழித் தடமாக அகலப்படுத்துவதால் பெரும் வாகன நெரிசல் குறையும். மேற்கண்ட பணியானது, கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவான்மியூரில் தொடங்கி, அக்கரை வரை, 8.80 கி.மீ. நீளத்திற்கு நடைபெற்று வருகிறது.
இச்சாலையை, திருவான்மியூர் முதல் அக்கரை வரை ஆறுவழித் தடமாக அகலப்படுத்த நிலஎடுப்புப் பணிக்கு, ரூ.940 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் அரசு வழங்கியுள்ளது என்று தெரிவித்த அமைச்சர்,
திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லுார் ஆகிய ஆறு கிராமங்களில் நிலஎடுப்புப் பணி 15 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.
இச்சாலை விரிவாக்கப் பணியானது, திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம் மற்றும் நீலாங்கரை முதல் அக்கரை வரை என 4 கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு கொட்டிவாக்கம், பாலவாக்கம் மற்றும் நீலாங்கரை முதல் அக்கரை வரை 3 கட்டங்களாகப் பணிகள் நடைபெற்று வருகிறது. கிழக்குக் கடற்கரைச் சாலையை ஆறுவழித் தடமாக அகலப்படுத்துவதற்கு கொட்டிவாக்கம் பகுதியில் ரூ.19 கோடி மதிப்பீட்டிலும், பாலவாக்கம் பகுதியில் ரூ.18 கோடி மதிப்பீட்டிலும், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லுார் பகுதிகளில் ரூ.135 கோடி மதிப்பீட்டிலும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் 11.04.2025இல் முடிவுடையும் என்று தெரிவித்தார்.
இப்பணியில் சாலையின் மையத்தில் 1.2 மீட்டர் அகலத்திற்கு மைய தடுப்புச் சுவர், தடுப்புச் சுவரின் இருபுறமும் 11 மீட்டர் அகலத்திற்கு தார் தளம், 1.65 மீட்டர் அகலத்திற்கு பேவர் பிளாக் தளம் மற்றும் 2 மீட்டர் அகலத்திற்கு மழைநீர் வடிக்கால்வாய் மற்றும் நடைபாதை அமைக்கப்பட உள்ளது. நிலஎடுப்பு செய்த இடங்களில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிவுற்ற இடங்களில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பயன்பாட்டு உபகரணங்களை மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மின்சார உபகரணங்கள் மாற்றி அமைக்கப்பட்டவுடன், சென்னை குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் குடிநீர் குழாய் மற்றும் பாதாள கழிவு நீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் இருபுறமும் நடைபெறும் என்று தெரிவித்தார். இத்திட்டங்களை விரைவாகவும், தரத்துடனும் செயல்படுத்தி முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் எடுக்குமாறு அறிவுரைகள் வழங்கினார்.
இந்த களஆய்வுப் பணிகளில், முனைவர் ஆர்.செல்வராஜ், இ.ஆ.ப., அரசு செயலாளர், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, கு.கோ.சத்தியபிரகாஷ், தலைமைப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு), ச.ஜவஹர் முத்துராஜ், தலைமைப் பொறியாளர் (பெருநகரம்), எம்.சரவணன், இயக்குநர், நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் மற்றும் இரா.சந்திரசேகர், சிறப்பு அலுவலர் (டெக்னிக்கல்) நெடுஞ்சாலைத்துறை ஆகியோர் ஈடுபட்டனர்.