சென்னை: தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் ரூ.1,66,727ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய அமைச்சர், தமிழ்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு குறித்த கணிப்பை பொருளியியல், புள்ளியியல் துறை தயாரித்துள்ளது. தமிழ்நாட்டின் பொருளாதாரம் கடந்த 2 ஆண்டுகளில் எப்படி வளர்ந்துள்ளது என்பது குறித்து புள்ளி விவர அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.
தமிழ்நாட்டின் உற்பத்தி மதிப்பு ரூ.20.71 லட்சம் கோடி:
2022-23-ம் ஆண்டில் தமிழ்நாட்டின் உற்பத்தி மதிப்பு நிலைத்த விலையில் ரூ.20.71 லட்சம் கோடியாக உள்ளது. நடப்பு விலையில் தமிழ்நாட்டின் உற்பத்தி மதிப்பு ரூ.23,64,514 கோடியாக உள்ளது. நாட்டின் பிற பகுதிகளை விட தமிழ்நாட்டில் விலைவாசி குறைவாக உள்ளது. கொரோனா காலத்தில் இந்தியாவில் வளர்ச்சி விகிதம் மைனஸில் இருந்தபோதும் தமிழ்நாட்டில் வளர்ச்சி அதிகரித்து இருந்தது.
இந்திய உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு:
இந்திய உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 9.1%ஆக உள்ளது. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2021-22-ல் 7.92%ஆகவும், 2022-23-ல் 8.19% ஆக உள்ளது. நடப்பு விலையில் 2021-22-ல் தமிழ்நாட்டின் உற்பத்தி வளர்ச்சி விகிதம் 15.84%ஆகவும் 2022-23-ல் 14.16%ஆக உள்ளது.
தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் ரூ.1,66,727ஆக உயர்வு:
தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் ரூ.1,66,727ஆக உயர்ந்துள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இந்தியாவில் தனிநபர் வருமானம் ரூ.98,374ஆக உள்ள நிலையில் தமிழ்நாட்டில் அதை விட அதிகமாக ரூ.1,66,727ஆக உள்ளது. இந்திய அளவிலான தனிநபரின் சராசரி ஆண்டு வருமானத்தை விட தமிழ்நாட்டில் கணிசமாக உயர்ந்துள்ளது. 2021-22-ல் இந்திய சராசரி தனிநபர் வருமானமான ரூ.92,583-ஐ விட தமிழ்நாட்டில் ரூ.59,979 அதிகமாகும். 2022-23-ல் இந்திய சராசரி தனிநபர் வருமானமான ரூ.98,374-ஐ விட தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் ரூ.68,353 அதிகமாகும்.
தேசிய சராசரியை விட தமிழ்நாட்டு வளர்ச்சி அதிகம்:
வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த துறைகளின் பங்கு மொத்த உற்பத்தியில் 12.18, 11.73%ஆக உள்ளன. தமிழ்நாட்டில் கால்நடைத்துறை சிறப்பான வளர்ச்சியைக் கண்டுள்ளது. உற்பத்தித் துறையின் பங்களிப்பு 36.9%லிருந்து 37.4%ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் உற்பத்தித் துறை வேகம் எடுத்துள்ளது; 2021-22-ல் 9.7%ஆக இருந்த உற்பத்தித் துறை வளர்ச்சி 2022-23-ல் 10.4% ஆக வளர்ச்சியடைந்துள்ளது.
பொருளாதாரத்தில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு:
கடந்த 2 ஆண்டுகளாக சராசரியாக 8% வளர்ச்சியை தமிழ்நாடு சந்தித்து வருகிறது. சேவைத்துறையின் பங்கு ரூ.6.57 லட்சம் கோடியாகும்; மொத்த உற்பத்தி மதிப்பில் இது 50.9%ஆகும். தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் என்பது அனைத்துத் துறைகளிலும் சமச்சீரான வளர்ச்சியை உறுதி செய்துள்ளது. உற்பத்தித் துறையில் தமிழ்நாடு அரசு அதிகம் கவனம் செலுத்துவதால் வேலைவாய்ப்புகளும் அதிகரித்துள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.