தேனி: வரும் 2047ம் ஆண்டுக்குள் பொருளாதாரத்தில் மிகப்பெரிய வல்லரசாக இந்தியா மாறும் என ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் உள்ள சென்டெக்ட் வேளாண்மை அறிவியல் மையத்தில் மாவட்ட அளவிலான வள மைய திறப்பு விழா மற்றும் பெண் தொழில் முனைவோர்களுக்கான தொழில்நுட்ப கருத்தரங்கம் ேநற்று நடந்தது. இதில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது:
3வது முறையாக பிரதமராக மோடி பொறுப் பேற்ற பின் 100 நாட்களில் ரூ.1,32,470 கோடி நிதி விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விவசாயிக்கும் கிஷான் அட்டை வழங்கப்பட்டுள்ளது. விவசாயமும், விவசாயிகளுமே நாட்டின் முதுகெலும்பு என்ற என்ற அடிப்படையில், விவசாயிகளுக்கு கிரிஷி விக்யான் கேந்திரா திட்டம், நமோ டிரோன் திட்டத்தின் மூலம் விவசாயிகள் மருந்து தெளிப்பது, விதைகள் விதைப்பது, பயிர்களை பாதுகாப்பது போன்ற புதிய தொழில்நுட்பத்தை புகுத்தி வழிகாட்டி வருகிறார்.
அதேபோல், 1962 என்ற எண்ணுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தால் வீட்டிற்கே வந்து கால்நடைக்கு சிகிச்சை அளித்து செல்லும் முறை உலகத்தில் எங்கும் இல்லை. பால் கொள்முதலில் இந்தியா தன்னிறைவு அடைந்துள்ளது. உலக அளவில் இந்தியா பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. 2047ம் ஆண்டுக்குள் பொருளாதாரத்தில் மிகப்பெரிய வல்லரசாக இந்தியா மாறும். விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான ஆயுள் கால பாலிசிகளும் அதற்கான திட்டமும் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு பேசினார்.